பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

நாடக மேடை நினைவுகள்


இரண்டாம் காட்சி, அமலாதித்யன் தன் தந்தையின் உருவத்தைச் சந்திக்கும் காட்சியாகும். அக்காட்சி மிகவும் அழகாக ஜோடித்திருந்ததனாலோ அல்லது அமலாதித்ய னுடைய தந்தையின் அருவமாக நடித்த எம். சுந்தரேச ஐயர் மிகவும் நன்றாய் நடித்ததனாலோ, அல்லது நான் நன்றாய் நடித்ததனாலோ, ஜனங்கள் அதை மிகவும் நன்றாயிருந்த தெனக் கொண்டாடினர் என்று அறிந்தேன். ஆயினும் எனது மூன்றாவது காட்சி அவ்வளவாக எனக்குத் திருப்திகரமாயில்லை . முதலில், அக்காட்சியில் “பதங்கள், பதங்கள், பதங்கள்!” என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் கூற வேண்டியிருக்கிறது. அதை ஒரு நூதனமானபடி நடிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்து நடிக்க, சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சர். சுப்பிரமணிய ஐயரோ அல்லது வி.கிருஷ்ணசாமி ஐயரோ நன்றாயிருந்ததெனக் குறிக்கும் பொருட்டு குட் குட் (Good Good) என்று சொன்னது என் செவியிற்பட, எனக்கிருந்த பயமெல்லாம் பெரும் பாலும் போனவனாகி, உற்சாகத்துடன் நடிக்க ஆரம்பித்தேன். அது முதல், நாடகம் முடியும் வரையில் எனது முக்கியமான பாகங்கள் வரும்பொழுதெல்லாம் சபையோர் கரகோஷம் செய்தனர்!

இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இதை நான் ஏதோ தற்புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று எண்ணக்கூடாது. நடந்த விருந்தாந்தத்தையெல்லாம் உண்மையாக எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணியிருப்பதால் இதை இங்கு எழுதலானேன். அன்றியும் ஆக்டர்களுக்குத் தக்க புத்திமான்கள் ஏதாவது கொஞ்சம் உற்சாகப்படுத்தினால், அவர்களுக்கு அது அவர்களுடைய பயத்தைப் போக்கி எவ்வளவு நன்றாய் நடிக்கச் செய்யக்கூடுமென்பதைப் பலருக்கும் அறிவிக்கும் பொருட்டாம். இதைக் கருதியே, என்னுடன் மேடையில் புதிய ஆக்டர்கள் யாராவது, முதன் முதல் நடிக்கத் தொடங்கினால் அவர்கள் என்ன தப்பு செய்தபோதிலும், பெரிதல்ல, சுமாராயிருக்கிறது, என்று சொல்லி அவர்களைத் தட்டிக் கொடுப்பது வழக்கம். இந்தச் சூட்சுமத்தை அறியாத எனது நண்பர்களில் சிலர் “சம்பந்தம் என்ன எல்லோரையும் புகழ்ந்து விடுகிறான்!” என்று தவறாக எண்ணியிருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம்,