பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

319


அரங்கப் பீதியடைந்திருக்கும் ஆக்டர்களுக்குச் சிறிது உற்சாகமானது, எவ்வளவு பயன்படுகிறது என்று நான் சுயானு பவத்திற் கண்டதன் பலனை மற்றவர்கள் பெறும் பொருட்டே என்பதை, என்மீது குறை கூறுபவர்கள் அறிவார்களாக.

அதற்கப்புறம் நான் வருகிற காட்சிதான், இந் நாடகத்தில் ஆக்டர்களுக்கு “வியாச கட்டம்” போன்றது. இதில்தான், “இருப்பதோ இறப்பதோ” (To be or not to be) என்கிற மிகவும் கடினமான அமலாதித்யன் தனிமொழி (Soliloquy) வருகிறது; அன்றியும் இதில்தான் அமலாதித்யன் அபலையைச் சந்திக்கிறான். இந்நாடகத்தில் முதன் முதல் இதற்குக் கன்யாமாடக் காட்சி (Nunnery Scene) என்று இங்கிலீஷ்காரர் பெயரிட்டிருக்கின்றனர். இது நடிப்பது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது; இதைத் தெய்வானுகூலத்தினால் சபையோருக்கு மிகவும் திருப்திகரமாய் நடித்தேன் என எண்ணுகிறேன்; ஆயினும் இக்காட்சியில் நான் அபலையை விட்டுப் பிரியும் பொழுது சபையோர் செய்த பெரும் கரகோஷமானது, பாதி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலு அபலையாக நன்றாய் நடித்ததற்காக என்று உறுதியாய் நம்புகிறேன். இக்காட்சியானவுடன், மறு காட்சி, “நாடகத்துள் நாடகம்” (Play within a play) என்பதான படியால், அதற்காக, அரங்கத்தின் மத்தியில் சிறு அரங்க மொன்றை ஏற்படுத்தும்பொருட்டு, ஐந்து நிமிஷம் இடைக் காலம் (Interval) கொடுக்கப்பட்டது. அந்த இடைக்காலத்தில் அதுவரையில் வெளியிலிருந்து நாடகம் என்னமாகப் போகின்றது என்ற கவனித்துக் கொண்டிருந்த எனது நண்பர்களுட் பலர் வேஷம் தரிக்கும் நேபத்யத்திற்கு (Green Room) வந்து, என்னைப் புகழ்ந்து கூறினர். மற்றவர்கள் கூறிய வார்த்தைகளைவிட, “உன்னால் இந்த ஹாம்லெட் வேஷம் சரியாக ஆக்டு செய்ய முடியாதென்று கூறிய, எனது நண்பர் ஆ. வாமன்பாய் கூறியதுதான் எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. அவர் என்னைப் புகழ்ந்துரைத்த வார்த்தைகளை நான் இங்குக் கூறவில்லை. கடைசியில் அவர் கூறியது மாத்திரம் எழுதுகிறேன்; அவர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளின் மொழி பெயர்ப்பு, “சம்பந்தம்! என் தொப்பியைக் கழற்றி உன்னை வணங்குகிறேன்! நீ