பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

நாடக மேடை நினைவுகள்


ஜெயித்தாய்! நான் தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறேன்!” என்பதாம். இவ்வார்த்தைகள் அவர் என்னுடன் போட்ட பந்தயத்தைப் பொறுத்தனவாம் என்பதை என் நண்பர்கள் கவனிப்பார்களாக.

எனது நண்பர் இவ்வாறு கூறிவிட்டு, “இனியும் இரண்டு மூன்று கட்டங்கள் இருக்கின்றன. ஜாக்கிரதையாயிரு” என்று புத்தி சொல்லிவிட்டு வெளியே போனார்.

இப்பொழுதுதான் என் பயமெல்லாம் நீங்கி மிகவும் திருப்தியடைந்தேன் என்று நான் கூற வேண்டும். எனது நண்பர்கள் என்னை இவ்வாறு புகழ்ந்ததனாலோ அல்லது சபையோரெல்லாம், எனது முக்கியமான வார்த்தைகளுக் கெல்லாம் கரகோஷம் செய்ததனாலோ, நாம் இந் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமம் கடவுள் கிருபையால் வியர்த்தமாகவில்லை என்று உந்தப்பட்டவனாய், பிறகு வந்த, நாடகத்துள் நாடகக் காட்சியிலும், அமலாதித்யன் தன் தாயாருடன் பேசுங் காட்சியிலும் எனது முழு உற்சாகத்துடன் நடித்தேன். முக்கியமாக இரண்டாம் முறை இந் நாடகத்தில் அமலாதித்யனுக்கு அருவம் தோன்றும் இந்த இரண்டாவது காட்சியில், நான் அருவம் மறையும்பொழுது ஆச்சரியமும் பயமும் குறிக்கும் மலர்ந்த என் கண்களால், அதைப் பின்தொடர்ந்தது - சபையை மிகவும் களிக்கச் செய்தது. சாதாரணமாக இங்கிலாந்திலுள்ள ஆக்டர்கள் செய்வதில்லை. முதல் முதல், அமெரிக்கா தேசத்து ஆக்டராகிய எட்வின் பூத் (Booth) என்பவர்தான் இதை ஆரம்பித்தவர்; இதை நான் ஒரு புஸ்தகத்தில் வாசித்து, இப்படித்தானிருக்க வேண்டுமென்று மனத்தில் தீர்மானித்து, நடித்தேன். இக்காட்சி முடிந்தவுடன், நாங்கள் இரண்டாம் இடைக்காலம் கொடுத்தபொழுது ஆர்தர் டேவிஸ் (Arthur Davies) என்பவர், நேபத்யத்தின் பின் வந்து, இதைப்பற்றி வியந்து பேசி, “இதை எங்கிருந்து கற்றாய்?” என வினவ, நான் “அமெரிக்கா தேசத்து ஆக்டர் எட்வின்பூத் இவ்வாறு செய்ததாகப் படித்தேன். ஆகவே அவரிடமிருந்து நான் கற்றதாகக் கூற வேண்டு”மென்று விடை கொடுத்தேன்.

இவ்வாறு நான் எல்லோராலும் புகழப்பட்டது எனக்கு ஒரு கெடுதியைப் பயந்தது. நான் அளவிற்கு மிஞ்சிய சந்தோஷத்தை அடைந்தேன் என்று நினைக்கிறேன்.