பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

நாடக மேடை நினைவுகள்


நீங்கள் ஜாக்கிரதையாயிருங்கள். உங்களை மறந்து எங்கேயாவது என்னைக் குத்திவிடப் போகிறீர்கள்!” என்று, அப்போதைக்கப்போது எச்சரிக்கை செய்திருந்தும், இந்நாடகம் நடந்த இம்முறையோ அல்லது ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இதை இரண்டு மாதம் பொறுத்து மறுபடியும் ஆடியபொழுதோ, இக் கடைசிக் காட்சியில், இவரை என் கையிலிருந்த ரேபியர் (Rapier) கத்தியால் பலமாய்க் குத்திவிட்டேன். தெய்வாதீனத்தால் அந்தக் குத்து, அவர் அணிந்திருந்த பெல்ட்டில் (Belt) பட்டது; குத்திய வேகத்தினால் பெல்ட்டில் பட்டபொழுது என் கத்தி, அப்படியே “ட” ஆனா மாதிரி வளைந்து விட்டது! அந்த பெல்ட் தடுத்திராவிட்டால், அவரது வயிற்றில் பிரவேசித் திருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை ; நாடகம் விபரீதமாய் முடிந்திருக்கும்! ஈசன் கருணையானது இவ் ஆபத்தினின்றும் என்னைக் காத்தது.

சாராயம் குடிப்பவன், அது தவறு என்று நன்றாய் அறிந்திருந்தும், அந்த வெறி வரும் பொழுது, அதை யெல்லாம் மறந்து குடிப்பது போல்; இது தவறு, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ தீர்மானித்திருந்தும், மேடையின் மீது நடிக்கும் பொழுது இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எங்கேயோ பறந்தோடிப் போய், என்னை மறந்தவனாகிறேன். இதற்கு இன்னொரு உதாரணம், இதே அமலாதித்யன் நாடகத்தில் நேர்ந்திருக் கிறது. இந்நாடகம் இன்னொரு முறை நாங்கள் நடித்த பொழுது, டாக்டர் ஸ்ரீநிவாச ராகவாச்சாரியார் காலதேவனாக நடித்தார். நாடகத்தின் கடைசிக் காட்சியில் அமலாதித்யன் காலதேவன் சூதினால் தன் மரணம் கிட்டியதெனக் கண்டறிந்தவன், காலதேவன் தன்னைக் கொல்வதற்காகச் சித்தம் செய்துவைத்திருந்த விஷக் குப்பியை எடுத்து, அதில் மகாராணி குடித்து மிகுதியாயிருந்த பானத்தை, காலதேவன் குடிக்கும்படி செய்கிறான்; இதை நான் நடிக்கும்பொழுது, டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி உதடு கிழிந்து இரத்தம் பெருகும்படியாக அழுத்தி விட்டேன்! இன்றும் ஏதாவது பேச்சு வரும்பொழுது, என் நண்பராகிய டாக்டர் இதைப் பற்றி என்னை ஏளனம் செய்வார்.