பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

19


இந்த நோட்டுப் புஸ்தகம் இன்னும் என்னிடம் இருக்கிறது. இதைத் தமிழில் கூடிய சீக்கிரத்தில் மொழி பெயர்க்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். நான் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த பி.ஏ. பரிட்சை தேறினவுடன் அங்ஙனம் செய்யலாமென்று தீர்மானித்து வைத்தேன். சபையின் நிர்வாக சபைக் கூட்டமொன்றில் ஒருநாள், சபையைச் சார்ந்தவர் பெரும்பாலும் மாணவர்களாயிருப்பதனால், அவர்களுடைய கல்விப் பயிற்சி கெடாமலிருக்கும் பொருட்டும் அவர்களுடைய தாய் தகப்பன்மார் சபையின்மீது குறை கூறாமலிருக்கும் பொருட்டும், பரீட்சைக்குப் போகும் ஒவ்வொரு அங்கத்தினரும் பரீட்சைக்கு மூன்று மாத காலம் முதல் சபைக்கு வரலாகாதென்று ஒரு சட்டத்தை நான் பிரேரேபித்து நிர்வாக சபையார் அதை ஒப்புக்கொள்ளும்படிச் செய்தேன். அவர்கள் அச்சட்டத்தை ஒப்புக்கொண்டதும், நான் இனி மூன்று மாத காலம் வரை சபைக்கு அச் சட்டத்தின்படி வர முடியாதென்று தெரிவித்து சபைக்குப் போகாமல் நின்று விட்டேன். பிறகு அவ்வருஷத் தின் கடைசியில் ஏற்படுத்தியிருந்த பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேறின பிறகே மறுபடி சபையின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். இந்த மூன்று மாதத்திற்கிடையில், ஒருவன் ஆயுளில் ஒருவனுக்கு எல்லாவற்றைப் பார்க்கிலும் என்ன பெருங் கஷ்டம் சம்பவிக்குமோ அப்படிப்பட்டது எனக்குச் சம்பவித்தது. என்னை ஈன்ற, நான் வழிபட்டு வந்த தெய்வமாகிய என் மாதா திடீரென்று பரமனது பாதம் போய்ச் சேர்ந்தனர். இப்பெருந் துர்ப்பாக்கியத்தினால் என் மனத்திற்குண்டான வருத்தத்தை வகுத்துரைக்க நான் வார்த்தையற்றவனாயிருக்கிறேன்; அப்படி ஒருக்கால் வல்லவனாயினும், அதை, எனது நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப்புகுந்த நான், இங்கு வரைவது ஒழுங்கன்று. அக்காலத்தில் எனது தாய் தந்தையர் அனுமதியின்றி நான் ஒன்றும் செய்வது வழக்கமில்லை. நான் சுகுண விலாச சபையைச் சேர்ந்த பொழுது அவர்களுக்குத் தெரிவித்தே சேர்ந்தேன். என் தகப்பனார் “உனது படிப்பானது இதனால் கெடாதென்று எனக்கு நன்றாய்த் தெரியும், ஆகவே சேரலாம்"