பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

325


எனது பழைய நண்பராகிய ச. ராஜகணபதி முதலியார் பாலநேசர் வேடம் பூண்டு அதற்கேற்றபடி நடித்தார். இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்கள் நடிப்பவர், இதை நன்றாய் நடித்தது விசேஷமே.

ஹரிஹரனாக நடித்தது ம. ஆனந்தவேலு முதலியார் என்பவர், இவர்தான் அமலாதித்யனாக நடிக்க வேண்டு மென்று இச்சை கொண்டார். இதை அறிந்த நான் முன்பு ஹரிஹரனாக நடியுங்கள், சரியாகயிருந்தால் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி. இப் பாத்திரத்தைக் கொடுத்தேன். இவரால் அமலாதித்யன் பாகம் நடிக்க முடியா தென்பது என் எண்ணம். இவரிடம் இருந்த ஒரு குறை என்னவென்றால், இவரது முகமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரேமாதிரியாயிருக்கும். ரச பாவங்கள் மாறும்பொழுது இவர் முக பாவம் மாறாது! இதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தைச் சந்திக்கும்பொழுது அவரது தோழனாகிய ஹரிஹரனும் கூட இருக்கிறான். அருவம் தோன்றிய உடன் இருவரும் பீதி யடைந்த முகத்தை உடையவர்களாய்க் காட்ட வேண்டும்; இதற்காக அக் காட்சியை ஒத்திகை செய்யும் பொழுது பன்முறை, இவ்வாறு பயந்தவராய்க் கண் விழித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் முகமானது இந்த பாவத்தைக் காட்டச் சக்தியற்றதாயிருந்தது. நான் பன்முறை கேட்டும், “இதோ, பயந்தவன் போல் நடிக்கிறேனே என்று சொல்லுவதே ஒழிய முகத்தில் ஒரு பயச் சின்னமுமிராது! கண்கள் விழித்துக்காட்டுவதைவிட்டு, சற்றே சுருக்கிக்கொள்வார்! இப்படிப்பட்டவர் அமலாதித்யனாக நடிப்பதென்றால், நான் அதற்கிசைவதெப்படி? இதை இங்கு நான் எடுத்து எழுதியது, இவர்மீது குற்றம் கூறும்படியல்ல; ஆயினும் ஒவ்வொருவனும், ஏதாவது நாடகப் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினால் அதற்குத் தக்கபடி நடிக்க நமக்குச் சக்தியிருக்கிறதா என்று முதலில் யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே, இதை இங்கு எழுதலானேன். மற்றவர்கள் குறையினை எடுத்துக் கூறுவ தென்றால், அவர்களும் மற்றவர்களும் இனி அம்மாதிரியான