பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

நாடக மேடை நினைவுகள்


தவறிழைக்கா வண்ணம் எடுத்துக் கூற வேண்டுமேயொழிய, வேறெக் காரணத்தினாலும் கூறக் கூடாதென்னும் நியமமுடையவனாயிருத்தல் நலமெனத் தோன்றுகிறது.

ராஜகாந்தன், கிரிதரன் பாத்திரங்கள் பி. கோபாலசாமி முதலியாரும் சி. பாலசுந்தர முதலியாரும் எடுத்துக்கொண்டனர்.

இந்நாடகத்தில் ஹாஸ்ய பாகம் அவ்வளவாக இல்லாமல் போனாலும் வே. வெங்கடாசல ஐயர், நாடகத்தில் நாடக அரசனாகவும்; வடிவேலு நாயகர், நாடக அரசியாகவும் நடித்தது சபையோருக்குக் களிப்பைத் தந்தது. இக்காட்சியில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி, அவர் காலத்தில் வேஷதாரிகள் நாடக மேடையில், பேச்சிலும் நடிப்பதிலும் இழைத்த குற்றங்களை யெல்லாம் எடுத்துக் காட்டியுள்ளார்; அதற்கேற்ப, எனது இந் நாடகத் தமிழ் அமைப்பில், எனது காலத்திய, ஜீவனத்திற்காக நாடகமாடும் வேஷதாரி களுடைய குற்றம் குறைகளையெல்லாம், இவ்விரண்டு ஆக்டர்களைக் கொண்டு எடுத்துக் காட்டியுள்ளேன். வே. வெங்கடாசல ஐயர் நாடக அரசனாய் நடித்ததுமன்றி, இந் நாடகத்தின் கடைசி அங்கத்தில் வெட்டியானாகவும், மிகவும் நன்றாய் நடித்தார்.

இந்நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து சற்றேறக் குறைய 5 மணி நேரத்திற்குமேல் பிடித்தது, முற்றுப்பெற. இதற்குப் பிறகு இதை ஆடும்பொழுது மிகவும் நீடித்திருக்கிறது என்று சில பாகங்களாகக் குறைத்தேன்.

நாடகத்திற்கு அத்யட்சராக விஜயம் செய்த சா. சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒன்பது மணிக்கெல்லாம் வந்தவர், தனக்கு வயதானபடியாலும், நித்திரையின்றி அதிக காலம் இரவில் கழித்தால் தன் உடம்பிற்கு ஒத்துக்கொள்வதில்லை யென்றும் சொல்லி, எங்கள் சபை பிரசிடென்டாகிய வி. கிருஷ்ணசாமி ஐயரிடம், “ஓர் அரைமணி நேரம் பார்த்து விட்டுப்போவேன்! என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதற்குக் கிருஷ்ணசாமி ஐயர், உங்கள் இஷ்டப்படி செய்யலாமென்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம். பிறகு நாடகம் ஆரம்பித்த பிறகு ஒரு மணிநேரம் ஆகியும். சர். சுப்பிரமணிய ஐயர் இடம் விட்டுப் பெயராது மேடையின் மீதே கண்ணாயிருப்பதைக் கண்டவராய், கிருஷ்ணசாமி ஐயர் அவரைப் பார்த்து