பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

327


ஒருமுறைக்கு இரண்டு முறை, “ஐயர்வாள் சீக்கிரம் போக வேண்டுமென்று சொன்னாற் போலிருக்கிறது” என்று ஞாபகப்படுத்தினாராம்; அதற்கு சர். சுப்பிரமணிய ஐயர், “அதெல்லாம் உதவாது கிருஷ்ணசாமி ஐயர், கடைசி வரையில் பார்த்துவிட்டுத்தான் போக வேண்டும்!” என்று சொன்னாராம். இதையெல்லாம் அருகிருந்த ஒருவர் எனக்கு அன்றிரவே தெரிவித்தார்.

இவ்வாறு அரைமணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதென்று தெரிவித்தவர், 5 மணிக்கு மேல் இருந்ததுமன்றி நாடகம் முடிந்தவுடன், தானாக, தன்னை யொருவரும் கேளாமலிருக்கும் பொழுதே, சபையோர் அறிய, கால் மணி சாவகாசத்திற்கு மேல், நாடகத்தையும் நாடகத்தில் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார். என்னைப்பற்றியும் கொஞ்சம் புகழ்ந்தார் என்பது என் ஞாபகம். முக்கியமாக, எங்கள் சபை இம் மஹானால் புகழப்பட்டதே என்று சந்தோஷப்பட்டேன். நான் அன்றிரவு வீட்டிற்குப்போய், “தெய்வத் தாலாகா தெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலி தரும்!” என்னும் திருக்குறளை நினைத்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் உறங்கினேன்.

மறுநாள் காலை, டாக்கர் தோட்டத்தில் (Taukers gardens) சூணாம்பெட்டு ஜமீன்தார் முத்துக்குமாரசாமி முதலியார் அவர்கள் சர். வி. சி. தேசிகாச்சாரியாருக்கு ஒரு விருந்தளித்தனர். அதற்கு நானும் வரவழைக்கப்பட்டுப் போக, அங்கு என்னைப் பார்த்தவர்கள் அநேகர் முன்னாள் நடந்த நாடகத்தைப் பற்றியும் எங்கள் சபையைப் பற்றியும் மிகவும் கொண்டாடிப் பேசினர். நான் ஆடியதையும் புகழ்ந்தனர் என்பது என் ஞாபகம். முக்கியமாக சர். வி.சி. தேசிகாச்சாரியார் கூறிய வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “என்ன சம்பந்த முதலியார்! நேற்று ராத்திரி, சுகுண விலாச சபை நாடகம் மிகவும் நன்றாயிருந்ததாமே! காலை மணி அய்யர் அவர்களைப் பார்த்தேன். அவர் நேற்றிரவு தான் பார்த்த நாடகத்தைப்பற்றி அரை மணி சாவகாசம் பேசினார். உங்களை மிகவும் புகழ்ந்தார். என்ன சார்! இர்விங் கிர்விங் (Sir Henry Irving) என்று சொல்லு கிறார்கள்; அவர் கூட இம்மாதிரியாக நடிப்பார்களோ என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது!” என்று ஆங்கிலத்தில்