பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

நாடக மேடை நினைவுகள்


தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இதை இங்கு எழுதுவதற்காக என் நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயினும் தற்புகழ்ச்சியாக இதை வெளியிட்டேன் என்று எண்ணாதிருப்பார்களாக. சர். ஹென்றி இர்விங்குடன், ஒப்பிட்டுக் கூறும்படியான அவ்வளவு பெருமை எனக்கு இல்லை என்பதை உறுதியாய் நம்புகிறேன். இவ்விடம் இதை எழுதியதற்குக் காரணம், எங்கள் சுகுண விலாச சபை நடத்திய நாடகத்தை, சிறந்த கல்விமான்களும், புத்திமான்களும் கொண்டாடினார்கள் என்று கூறும் பொருட்டேயாம்.

சர். சுப்பிரமணிய ஐயர் இவ்வாறு புகழ்வதுடன் நில்லாது, இன்னொரு காரியமும் செய்தார். அதைப்பற்றி அக்காலத்தில் மறுபடியும் எங்கள் சபை பிரசுரம் செய்த “தமிழ் நாடக மேடை” (Indian Stage) என்னும் மாதாந்திரப் பத்திரிகையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் “ஒரு பெரும் தயாளமான கொடை” என்கிற தலைப் பெயர் வைத்து எழுதியுள்ளார். தான் பார்த்த அமலாதித்யன் நாடகத்தை மெச்சி, எங்கள் சபையை வாழ்த்தி, அதற்கு நன்கொடையாக ரூபாய் 250க்கு செக்கை அனுப்பினார் மறுதினம்! அக் கடிதம் இன்னும் எங்கள் சபையோரால் போற்றப்பட்டுப் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்கு எப்பொழுதாவது சாவகாசமிருந்தால் எங்கள் சபைக்கு வந்து காரியதரிசியிடமிருந்து உத்தரவு பெற்று, இக் கடிதத்தைக் கண்ணுறும்படி வேண்டுவேன். எங்கள் சபையைப் பற்றி இப் பெரியார் புகழ்ந்ததை அவர்கள் அறிய வேண்டுமென்று நான் இதைக் கேட்கவில்லை; அக் கடிதத்தின் கடைசியில் போஸ்ட் ஸ்கிரிப்டாக (Post Script) இப் பெரியார் எழுதியதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே நான் கேட்பது. கடிதத்தை யெல்லாம் எழுதி முடித்த பிறகு கடைசியில், “நான் இந்த ரூபாய் கொடுத்ததை, மற்றவர்கள் அறிய வேண்டியதில்லை!” என்று பொருட்பட ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே. “வலது கை செய்யும் தானத்தை இடது கையறியலாகாது!” என்னும் பழமொழியை உண்மை மொழியாக இப் பெரியார்பால் அவர்கள் கண்டு களிக்க வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.