பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

329



என் பால்ய நண்பரும், இந்நாடகத்தை நான் எழுதுவதில் எனக்கு நான் முன்புரைத்தபடி மிகவும் உதவி செய்த வருமான வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னைச் சந்தித்த பொழுது, “நீ இந் நாடகத்தில், நன்றாய் நடிப்பாய் என்பதைப்பற்றி நான் எப்பொழுதும் சந்தேகப்பட்ட வனன்று; ஆயினும், இவ்வளவு நன்றாய் நடிப்பாயென்று, நான் நினைக்கவில்லை” என்றார். எனக்கு மார்க்கும் (Mark) அதிகமாய்க் கொடுத்தார் என்று நினைக்கிறேன். எவ்வளவு என்பது எனக்கு ஞாபகமில்லை .

இந்த “அமலாதித்ய நாடக”மானது, எஸ்.பி.சி.ஏ. என்று சொல்லப்பட்ட, பிராணிகளுக்கு ஹிம்சையில்லாமல் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சபையாரின் உதவிக் காகக் கொடுக்கப்பட்டது. இதற்கு மொத்த வசூல் 685 ரூபாய் வந்தது. அதில் எங்கள் செலவு போக மிகுந்த தொகை, ரூபாய் 261-4-6 அந்தச் சபையாருக்குக் கொடுக்கப்பட்டது.

இந்த நாடகத்தைப் பலவிதத்தில் எங்கள் சபையின் ஒரு முக்கியமான நாடகமென எண்ண வேண்டியிருக்கிறது. இதனால் எங்கள் சபைக்குப் பெரும்புகழ் கிடைத்த தென்பதற்குச் சந்தேகமில்லை. இதற்கு முன்பு 15 வருடங்களாக நடத்தி வந்த நாடகங்களைப் பார்க்கிலும் இதற்குத்தான் அதிகப் பணம் வசூலாயது. அன்றியும் நாளது வரையில் கணக்கிட்ட போதிலும், இந் நாடகத்தில்தான் எங்கள் சபைக்கு அதிகப் பணம் வசூலாயிருக்கிறது; கொழும்பில் நாங்கள் இந் நாடகம் ஆடியபொழுது ரூபாய் 1792 வசூலானது; இதற்கு அதிகமாக இன்னும் எந்த நாடகத்திலும் எங்களுக்கு வசூலாகவில்லை. அன்றியும் இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களிலெல்லாம், இதுதான் மிகச் சிறந்தது என்று என் பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியிருக்கிறார். மேலும் எங்கள் சபையில் நூறாவது நாடகமாக இது 1908ஆம் வருஷம் ஆடப்பட்டது. கடைசியாக, இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களைப் பார்க்கிலும் இதில்தான் அரங்கத்தின் காட்சிகளை ஏற்படுத்துவதில், அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டோம். இதற்காக இவ்வருஷத்திய சபை அறிக்கை (Report) யில் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக, சபையார் வந்தனம் அளித்தனர்.