பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

நாடக மேடை நினைவுகள்


இந்த அமலாதித்ய நாடகமானது, இதுவரையில் எங்கள் சபையோரால் 12 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதை ஆடுவது கஷ்டமானபடியால் இதை அடிக்கடி ஆடுவதில்லை. அக்காரணம் பற்றியே இதர சபையார் இந்நாடகத்தை அதிமாய் ஆடினதில்லை; மற்றவர்கள் இதை இதுவரையில் ஒன்பது தரம்தான் ஆடியிருக்கிறார்கள்.

இவ் வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இந் நாடகம் எங்களால் மறுபடியும் ஆடப்பட்டது. இம்முறை இந் நாடகம் ஆடினதைப்பற்றி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதற்கு முன்பாக எனக்குக் கொஞ்சம் உடம்பு அசௌகர்யமாயிருந்ததனாலோ அல்லது எக்காரணத்தினாலோ என் மனம் இந்நாடகத்தின்மீதில்லை. நான் இதை இம்முறை நடித்தது எனக்கே திருப்திகரமாயில்லை; வந்திருந்தவர்களில் அநேகர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், எனது கற்றறிந்த நண்பர்களிற் பலர்; நான் முன்பு நடித்தது போலில்லை என்றே கூறினார்கள். முக்கியமாக எனது நண்பர் அ. வாமன்பாய் என்பவர், நான் இம்முறை ஆடியது தனக்குத் திருப்திகரமாயில்லை என்று கூறி என்னைச் சந்தித்து, “என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நான், இதை ஆடியபோது என் தேகத்திலும் உற்சாகமில்லை; ஏதோ காரணத்தினால் என் மனத்திலும் உற்சாகமில்லை என்று ஒப்புக் கொண்டேன். அதன்மீதவர், “இம் மாதிரியான முக்கியமான பாத்திரங்களாடும் பொழுது, இதை ஆடுவதில் நாம் சரியாக ஆடுவோம் என்று உன் மனத்தில் திடமாய்த் தோன்றாவிட்டால், ஆடாதே!” என்று புத்திமதி கூறினார். அவர் கூறியதை ஒப்புக்கொண்டு, அமலாதித்யன் முதலிய கஷ்டமான நாடகங்களில், என் மனத்தில் பூர்ண வகையும் திடமும் இல்லாவிட்டால் ஆடாது தவிர்த்து வந்திருக்கிறேன். இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் கடினமான நாடகங்களில் ஆட வேண்டி வந்தால், தங்கள் முழு மனத்துடனும், உற்சாகத்துடனும் ஆட, ஏதாவது தடையேற்பட்டால் அவற்றை ஆடாதிருப் பார்களாக. அச்சமயத்தில் இதற்கு நிதர்சனம் இம்முறை ஆடிய இந்நாடகத்திலிருந்தே எடுத்துக் கூறக் கூடும். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தை முதன்முறை சந்திக்கும் காட்சியில், முதன் முறை ஆடியபொழுது, அந்த