பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

333


அதுவரையில் போயறியாதவர்களாயிருந்தபடியால், அந்தப் பிரயாணம், எங்களுக்கு மிகவும் களிப்பைத் தந்தது. உதகமண்டலம் அல்லது ‘ஒத்தியில்’ (Ooty) எங்கள் சபை நண்பர்கள் எங்களுக்காகத் தக்க ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தனர். ஆயினும் முதலிலேயே எங்களுக்கு ஒரு பெருங்கஷ்டம் நேரிட்டது. போன மறுநாள், ‘விரும்பிய விதமே’ என்னும் நாடகம் வைத்துக் கொண்டோம். அன்று சாயங்காலம் 71/2 மணி வரையில் எங்கள் உடுப்புகள் வந்து சேரவில்லை! நாடக உடுப்புகள் இல்லாமல் எப்படி நாங்கள் நாடகமாடுவது? நந்தனாரைப்போன்ற நாடகமாயிருந்தால் ஆடிவிடலாம்; ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தக்க உடைகளில்லாமல் எப்படி நடிப்பது? நாடக சாலையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயது. முன்னாலே நாங்கள் அனுப்பிய திரைகளும் கட்டியாயது. உடைகள் மாத்திரம் இல்லை! இந்தக் கஷ்டத்தில் இன்னது செய்வதென்றறியாது திகைத்து நிற்கையில், அனுப்பிய எங்கள் உடுப்புப் பெட்டிகள் 71/2 மணிக்கு வந்து சேர்ந்தன! அதன்மீது, துரிதப்பட்டு, இந்நாடகத்துக்கு வேண்டிய அத்தனை ஆக்டர்களும் ஒரு மணி சாவகாசத்திற்குள்ளாகச் சித்தமானோம்! சாதாரணமாக எங்களுக்கு இதற்கு நான்கு மணி சாவகாசம் வேண்டும். விளம்பரங்களில் குறித்தபடி சரியாக ஒன்பது மணிக்கு நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகைக்கு ஆர்மரி ஹால் (Armoury Hall) என்று பெயர். அது அவ்வளவாகப் பெரிய இடம் அன்று; நாடகம் பார்க்க வந்த ஜனத் தொகை அதிகமாயும் இல்லை; கொஞ்சமாகவும் இல்லை; இது எங்கள் சபையின் குற்றமல்ல. எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு, விளம்பரங்கள் மூலமாக ‘ஒத்தி’வாசிகளுக்கு எவ்வளவு தெரியப்படுத்தக்கூடுமோ அவ்வளவு தெரியப்படுத்தினார். ஆயினும் அவ்விடம் தமிழ் அறிந்தவர்கள் அவ்வளவு அதிகமில்லாதபடியால், நாடகம் பார்க்க வந்த ஜனத்தொகை அதிகமாயில்லை. இச்சந்தர்ப்பத்தில் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு செய்த ஒரு யுக்தியை இங்கு எனது நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

‘ஒத்தி’ (Ooty) என்பது ஒரு சிறிய ஊர். அதில் அக்காலம் வாரத்துக்கு ஒரு முறைதான் சந்தை’ கூடுவதுண்டு.