பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

நாடக மேடை நினைவுகள்




அங்கிருப்பவர்கள், வாரத்திற்குத் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார்கள், எனது நண்பர், எங்கள் சபை அங்கு போயிறங்கின தினத்தில் காலையில், அச் சந்தைக்குப் போய் அதிகாலையிலேயே, அங்கு கடைகளிலிருந்த வாழை இலைகளை யெல்லாம், எங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும்படி வாங்கிவிட்டார்! பிறகு அச் சந்தையில் வாழை இலை வாங்க வந்தவர்களுக்கெல்லாம் ஒருவருக்காவது, ஒரு வாழையிலை யாவது கிடைக்காமற் போச்சுது! வாழை இலைக்காகக் கேட்பவர்களுக்கெல்லாம், கடைக்காரர்கள், பட்டணத்திலிருந்து ஏதோ ஒரு சபை வந்திருக்கிறதாம். அதற்காக, சந்தையிலுள்ள வாழை இலைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று பதில் உரைத்தனர். அச்சமயம் ஒத்தியில் தங்கள் பரிவாரங்களுடன் வந்திருந்த இரண்டொரு மஹாராஜாக்கள் வீட்டிற்குக்கூட வாழை இலை இல்லாமற் போயிற்று! இந்த யுக்தியின் மூலமாக, எல்லோரும், யாரடா இந்தச் சபை? என்று கேட்க நேரிட்டு, எங்கள் சபை ஒத்திக்கு வந்த சமாச்சாரம் நன்றாய்ப் பரவியது!

நாங்கள் ஆடிய முதல் நாடகத்தைப்பற்றி இங்கெழுதத்தக்க விசேஷம் ஒன்றும் அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. வழக்கம்போல் இந்நாடகத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரும், சி. ரங்கவடிவேலுவும் நல்ல பெயர் எடுத்தனர் என்பது தவிர வேறொன்றும் என் நினைவுக்கு வரவில்லை. இந்நாடகம் ஆடி முடிந்ததும், நாங்கள் அதுவரையில் தங்கியிருந்த ஒரு நண்பருடைய பங்களா, எங்களுக்குச் சௌகர்யக் குறைவாயிருந்தபடியால், விஜயநகரம் மகா ராஜாவின் பெரிய பங்களா அச்சமயம் காலியா யிருந்தபடியால் அதை ஐந்து நாளைக்கு 200 ரூபாய்க்கு, வாடகை பேசிக்கொண்டு, அங்கு போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் இங்காடிய இரண்டாவது நாடகம் தெலுங்கில் “வரூதினி” என்பதாம். இந்நாடகத்தை எழுதியவர் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு. இதில் முக்கியமான கதாநாயகனாக அவர் மிகவும் நன்றாய் நடிப்பார். இந்நாடகமானது, சில வருஷங்களாக சென்னையில் அடிக்கடி போடுவதுண்டு. எங்கள் சபையார், இதைப் பற்றி, சற்று விகடமாய்ப் பேசும்போது எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயர், “வருஷா