பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

335


வருஷம் சிராத்தம் வருவது போல் இது வந்து கொண்டிருக்கிறதே!” என்று வேடிக்கையாய்ச் சொல்வார். இந்த நாடகத்தை எப்படியாவது இவ்விடம் நடத்த வேண்டுமென்று இச்சை கொண்டவராய், இவர், ஒத்தியில் தெலுங்கு தெரிந்தவர்கள் அநேகம் பெயர் இருக்கின்றனர், தெலுங்கு நாகடமும் போடலாம் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் சந்தேகமாயிருந்த போதிலும் இவ்வளவு தூரம் சொல்லுகிறாரே பார்ப்போம் என்று ஆட்சேபிக்காது விட்டேன். இந்நாடகம் இங்கு ஆடிய பொழுது நாடகம் நன்றாயிருந்தது; ஜனங்கள்தானில்லை! முன்னால் கொடுத்த தமிழ் நாடகத்திற்கு வந்ததில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை! என்ன செய்வது? கொண்டபின் குலம் பேசி என்ன பிரயோஜனம்? ராமமூர்த்தி பந்துலுவின் மீதும் நான் குறை கூறுவதற்கில்லை. நானும் அந்தக் கிரந்த கர்த்தாவாயிருந்தால் அப்படியே செய்திருப்பேனோ என்னவோ? ஆங்கிலத்திலே “The wish is father to the thought” என்று ஒரு பழமொழியுண்டு. அதைத் தமிழில், “விருப்பமானது, எண்ணத்திற்குத் தந்தையாயிருந்தது” என்று ஒருவாறு கூறலாம். பந்துலு அவர்களின் செய்கையும் அவ்வாறு இருந்தது போலும்!

இந்தத் தெலுங்கு நாடகத்தினால் எங்கள் சபாவுக்கு நேரிட்ட நஷ்டத்தை யெல்லாம், இவ்விடத்தில் நாங்கள் கொடுத்த கடைசித் தமிழ் நாடகமாகிய “சாரங்கதரன்” சரிப்படுத்திவிட்டது. சாரங்கதரன் நாடகமாடிய தினம் சாயங்காலம் மழை பெய்ய ஆரம்பித்து ஏறக்குறைய இருட்டும் வரையில் பெரும் மழை பெய்தது. ஒத்தியில் மழை பெய்வதை அனுபவித்தவர்கள் அன்றிரவு எப்படி இருந்திருக்க வேண்டுமென்று அறிவார்கள். மழை ஆரம்பித்தால் தாரை தாரையாகக் கொட்டும். விஜயநகரம் மகாராஜாவின் பங்களாவிலிருந்து நாடகசாலைக்கு வர ஏறக்குறைய இரண்டு மைல் நாங்கள் நடந்து வர வேண்டியிருந்தது; வரும் வழியில் ஆக்டர்களாகிய நாங்கள் முழங்காலளவு ஜலத்தில் நடந்து வரவேண்டி வந்தது, சில இடங்களில். முந்திய நாடகமே நஷ்டத்தில் முடிந்ததே, இதுவும் நஷ்டத்தில் முடிந்தால் என்ன செய்வது என்று மனத்தில் துயரத்துடனே நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். ஸ்வாமி இருக்கிறாரென்று என் மனத்தை நான் தைரியம் செய்துகொண்டு, வேஷம் பூண ஆரம்பித்தேன்.