பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

337


ஒரு ரூபாய் கொண்டு வந்தால் டிக்கட்டு தருகிறேன் என்று சொன்னீர்கள்?’ என்று என்னுடன் சண்டை பிடிக்கிறான். நான் என்ன செய்வது இப்பொழுது?’ என்று என்னிடம் தன் மெல்லிய குரலுடன் தெரிவித்தார். ‘ஐயோ பாவம்! அம் மனிதன் (அவன் யாரோ எனக்குத் தெரியாது) இந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்திருக்கிறானே! ஒரு ரூபாய் கொண்டு வர!’ என்று எண்ணினவனாய், “அந்த மிகுதி ரூபாயை நான் கொடுக்கிறேன்! என் கணக்கில் போட்டுக்கொள்!” என்று சொல்லி, அம்மனிதனுக்கு இரண்டு ரூபாய் டிக்கட்டைக் கொடுக்கச் செய்தேன். இதை நான் எழுதியது, எங்கள் பொக்கிஷதாரர், எவ்வளவு கண்டிப்பானவர் என்று மற்றவர்கள் அறியும் பொருட்டும், அன்றியும், என்றும் சுயநலத்தையே நாடும் என் ஜன்மத்தில்கூடக் கோடைக் காலத்தில் எப்போதவது மழை நீர் துளிப்பது போல், இம்மாதிரியான அற்ப விஷயங்களிலாவது கொஞ்சம் மற்றவர்களுக்கு நம்மாலியன்ற அளவு உதவி செய்ய வேண்டும் என்னும் குணம் சிறிது இருக்கிறதுபோல எனக்குத் தோன்றுகிறதென, என் இளைய நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டே! இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள், இம்மாதிரியான சந்தர்ப்பங்கள், தங்களுக்கு நேருமானால், மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் பெரும் மனோசந்துஷ்டியை அடைவார்களாக!

இந் நாடகத்தில் முதற்காட்சியில் மதுரகவி மரத்தின் கிளையினின்றும் கீழே விழுந்தது முதல், கடைசி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பமும் வந்திருந்த சபையோரால், கிரஹிக்கப்பட்டு அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. நான் எழுதியுள்ள ஒவ்வொரு நாடகத்திலும், இன்னின்ன இடத்தில் ஜனங்கள் கரகோஷம் செய்வார்கள், இன்னின்ன இடத்தில் நகைப்பார்கள், இன்னின்ன இடத்தில் துக்கப்படுவார்கள், இன்னின்ன இடத்தில் நிசப்தமாய்க் கவனிப்பார்கள் என்று அனுபவத்தினால் எனக்கு ஒரு கணக்குண்டு. இதன் பிரகாரம் யோசிக்குமிடத்து இந் நாடகம் ஜனங்களை மிகவும் திருப்தி செய்ததென்றே நான் கூற வேண்டும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் சபையோர், நான் எண்ணியபடி செய்யாவிட்டால், ஆக்டர்கள் சரியாக