பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

339


என்பதே தோன்றவில்லை; ஆரம்பத்தில் எவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோமோ அவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோம். நாடக முடிவில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும” பாடும் பொழுது இதற்கு முக்கியக் காரணம் இவ்விடம் உஷ்ணம் என்பது சிறிதுமின்றி, குளிர்ச்சியாயிருந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. இக்காரணம்தான் போலும், இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் வருஷம் முழுவதும், ஒரு நாள்கூட விடாது இரவில் நாடகமாடுவதற்கு இடங்கொடுப்பது. அவர்கள், நமது தேசத்துக்கு வந்து, திருநெல்வேலி போன்ற ஜில்லாவில், மே - ஜூன் மாதத்தில் இரண்டு இராத்திரி ஒன்றாய் நடித்தால் நாம் இங்கு படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியும்.

கடைசி தினம் சாரங்கதர நாடகம் ஆடினவுடன் நாடகசாலையில் வெந்நீர் கிடைக்காமல், ஆக்டர்களெல்லாம் அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த பங்களாவிற்கு எங்கள் வேஷத்துடன், ஒவ்வொருவரும் ஒரு போர்வையைப் போர்த்துக்கொண்டு, நிலவு வெளிச்சத்தில் வேடிக்கையாய்ச் சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு நடந்து சென்றோம். இவ்வாறு அன்று நாங்கள் சந்தோஷமுள்ள மனமுடையவர் களாயிருந்ததற்கு முக்கியக் காரணம், சபைக்கு நஷ்டமில்லாத படி, தெலுங்கு நாடகத்தினாலுண்டான நஷ்டத்தையும் நீக்கிச் செலவுக்கும் வரவுக்கும் சரியாகப் போகும்படி அன்று நல்ல தொகை வசூலானதுதான் என்பதற்குச் சந்தேகமில்லை.

மறுநாள் காலை எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்த வி. கிருஷ்ணசாமி ஐயர், நாங்களிருந்த பங்களாவிற்கு வந்தார். இவர் இச்சமயம் ஒத்தியில் இருந்தும், முதல் இரண்டு நாடகங்களுக்கு ஏதோ அசந்தர்ப்பத்தால் வர முடியாமற் போயிற்று. கடைசி நாடகத்திற்கு வந்திருந்தார். தான் முன்னாளிரவு பார்த்த நாடகத்தைப்பற்றிச் சிலாகித்துக் கூற வேண்டிய இடங்களில் சிலாகித்துக் கூறி, குறையாயிருந்த இடங்களிற் குறைகளை எடுத்துக் கூறினார். இவரது சுபாவம் குறைகளை மறைக்காது, எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறும் சுபாவம் என்பதை இவரைத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். குறையாகக் கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாரங்கதர நாடகத்தில் நான் எழுதியபடி,