பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

நாடக மேடை நினைவுகள்


சித்ராங்கியானவள், சாரங்கதரன் தன் அறைக்கு வரப் போகிறான் என்று அறிந்தவுடன், அங்கிருந்த கண்ணாடியின் எதிராகப்போய் நின்று, தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, “நான் அழகாயிருக் கிறோனா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளுகிறாள். “இவ்வாறு ஒரு ஸ்திரீயும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள மாட்டாள், இது தவறு!” என்று வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் வாதித்தார். நான் இதற்கு எத்தனையோ எனக்குத் தோன்றிய நியாயங்களை எடுத்துக் கூறியும், தான் சொன்னதுதான் சரியென்று பிடிவாதமாகச் சொன்னார். அதன்மீது சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) என்னும் கிரந்த கர்த்தா கெனில்வொர்த் (Kenilworth) என்னும் நவீனத்தில் (Novel) கதாநாயகி, இவ்வாறு சொன்னதாக எழுதியிருக்கிறார் என்று எடுத்துக் கூறினேன். அதன் பேரில் கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீ சொல்வது சரிதான்!” என்று ஒப்புக்கொண்டார்.

இதை நான் இங்கு எழுதியதன் காரணம், அவருடன் வாதாடி வென்றேன் என்னும் கர்வத்தினாலன்று. சிறந்த புத்திமானாயிருந்தும், உன்னத பதவியை வஹித்தவராயிருந்தும், தான் கூறியது தவறு என்று பட்டவுடன், அதை ஒப்புக்கொள்ளும்படியான சிறந்த குணம் இவரிடமிருந்தது என்பதை எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை இங்கு எடுத்தெழுதலுற்றேன். அதுவரையில் நாம் கூறியதை எப்படியாவது ஸ்தாபிக்கவேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்த நான், இதன் பிறகு, இப் பெரியாருடைய இச் சிறந்த குணத்தைக் கடைப்பிடித்து நடக்கத் தீர்மானித்து, அது முதல் இதுவரையில், அதன்படி நடக்க முயன்று வருகிறேன் என்பதை என்னுடன் நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் அறிவார்களென நினைக்கிறேன். இதனால் நான் மிகவும் பயனடைந்தேன். ஆகவே இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் இதைக் கைப்பற்றி நடப்பார்களாக என்று கருதி இதை எழுதலானேன்.

எல்லாம் பேசி முடித்தான பிறகு, அவர் எங்களிடம் விடை பெற்றுத் தான் இருந்த வீட்டிற்குப் போகப்