பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

341


புறப்பட்ட பொழுது, பங்களாவின் கேட் (Gate) வரையில் அவரை வழி விட்டு வர அவருடன் நான் போனபொழுது, தெலுங்கு நாடகத்தினால் சபைக்கு அதிக நஷ்டம் உண்டானதென்பதைக் கேட்டறிந்த அவர், மொத்தத்தில் எப்படியிருக்குமென என்னைக் கேட்க, “எல்லாம் சரியாகி விடும்; நேற்று வந்த தொகையானது அந்த நஷ்டத்தை யெல்லாம் அடைத்துவிடும். ஒரு முப்பது நாற்பது ரூபாய்தான் குறையும் போலிருக்கிறது. அது ஒரு பெரிதல்ல” என்று பதில் உரைத்தேன். அவர் ஒன்றும் பேசாது புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போன ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அவரிடமிருந்து எங்கள் சபைக் காரியதரிசிக்கு ஒரு நிரூபம் வந்தது. அதில் ஒரு 50 ரூபாய்க்கு ஒரு செக்கை வைத்து “சபைக்கு நேரிட்ட நஷ்டத்தை அடைக்க” என்று ஆங்கிலத்தில் ஒரு துணுக்கு எழுதியிருந்தது. “தினைத்துணை நன்றி செய்யினும், பனைத் துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்” என்ற திருக் குறளின்படி, அந்நன்றியை நாங்கள் அனை வரும் மிகவும் பாராட்டினோம். அவர் அனுப்பிய ரூபாய் 50, அவருக்கு ஒரு பெரிதல்ல; எங்கள் சபைக்கும் அது ஒன்றும் அதிகமில்லை ; அவர் அதை உதவிய விதமும், அதன் பின் இருந்த ஹிருதயமும் எங்களைப் பூரிக்கச் செய்தது.

அவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், அவரை ஏதோ முகஸ்துதி செய்கிறேன் என்று எண்ணாதிருக்கும்படி வேண்டுகிறேன். அனேகம் வருடங்களுக்கு முன் இறந்தவரை இப்பொழுது முகஸ்துதி செய்து நான் அடையப்போகிற பலன் என்ன? ஆயினும் அப்பெரியாருடைய அரிய பெரிய குணங்களுக்கு ஈடுபட்ட மனத்தினனாய் அவருக்கு நான் செலுத்த வேண்டிய கடமையைக் கொஞ்சம் கழிக்க முயலுகிறேன்.

காலையில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் இருக்குமிடத்தில் எங்களையெல்லாம் சாயங்காலம் டீ (Tea) சாப்பிட அழைத்தார். நாங்கள் அப்படி அழைத்ததற்காக அவருக்கு வந்தனம் செய்து,"நாங்கள் வருவதற்கில்லை ; எங்களையெல்லாம் இன்று சாயங்காலம் செக்ரடேரியட் ஆபீசில் இருக்கும் எங்கள் சினேகிதர்கள் டீ (Tea) சாப்பிடச்