பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

நாடக மேடை நினைவுகள்


சாயங்காலம் அழைத்திருக்கிறார்கள்; அங்கு போவதாக ஒப்புக்கொண்டோம்.’ என்று பதில் உரைக்க, “நமது சபையை யெல்லாம் அவர்கள் வரும்படிக் கேட்டிருந்தால், நீ எனக்கேன் தெரிவிக்கவில்லை? அப்படித் தெரிவிக்காதது தவறு! நான் சபையின் பிரெசிடென்ட் என்பதை மறந்தீர்கள் போலும்!” என்று சிரித்துக்கொண்டே, எங்கள் மீது கோபித்து மொழிந்து, அன்று சாயங்காலம் பார்ட்டி (Party) க்குத் தானும் வருவதாகத் தெரிவித்து, “நீங்கள் எல்லாம் அங்கு வருமுன் நான் அங்கு போய்ச் சேரப் போகிறேன். அப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!” என்று சொல்லி, அப்படியே அங்கு வந்து சேர்ந்தார். வந்ததுமன்றி, எல்லோருடனும் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எங்களுக்கு விருந்தளித்த செக்ரடேரியேட் நண்பர்களுக்கு எங்கள் சபையின் சார்பாக வந்தனம் அளித்தார். நான் எப்பொழுதாவது, என் இளைய நண்பர்களுடன் இம்மாதிரிக் கலக்க வேண்டி வந்தால், நான் மூத்தவன், அவர்களைவிட அந்தஸ்துடையவன், அவர்களுடன் சரிசமானமாகக் கலப்பதா என்னும் துர் எண்ணம் எனக்குத் தோன்றினால், இப்பெரியார் நடத்தை என்னும் பெருந்தடி கொண்டு, அதன் மண்டையில் அது தலை யெடுக்கவொட்டாமல் போடுவது வழக்கம்; பெரியோருடன் நாம் பழகுவதனால், நாம் பெறும் முக்கியமான நலம், இத்தகைய புத்திமதிகளை அவர்கள் சொல்லாமற் சொல்வதேயாம்.

அன்று சாயங்காலம், ஒத்தியில் எங்கள் நண்பர்கள் எங்களுக்கு, அவர்களுடைய டெனிஸ் கோர்ட்டில் (Tennis court) கதிரவன் குடதிசையில் மூழ்குமுன் தன் ஒள்ளிய கிரணங்களால், மலைப் பிரதேசமெங்கும் அழகுறச் செய்யும் சாயங்காலத்தில் கொடுத்த சிற்றுண்டி உபசரணையும், நாங்கள் இரண்டு மணி நேரம் வேடிக்கையாய்ப் பேசிக் காலங்கழித்ததும், முடிவில் வி. கிருஷ்ணசாமி ஐயர், எங்கள் சபையின் சார்பாகப் பேசிய வார்த்தைகளும், என் மனத்தில் இன்னும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் ‘கடின சித்தமுடையவர்’ என்று சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன். அக்கடினமான வார்த்தைகளுக்குப் பின் இருந்த வெண்ணெயைப் போல் இளகிய சுத்தமான ஹிருதயத்தை அவர்கள் அறியவில்லை போலும்!