பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

343



எங்கள் சபை ஒத்திக்குப் போயிருந்த கதையை முடிக்கு முன், அன்றிரவு நடந்த ஒரு சிறு கதையைக் கூறுகிறேன். அன்றிரவு நாங்கள் எல்லாம் போஜனங் கொள்வதற்கு வெகு நாழிகையாய் விட்டது. நாங்கள் உடனே புறப்பட்டு மாட்டு வண்டிகளில் ஏறி (அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் அதிகமாய்க் கிடையாது) மேட்டுப்பாளையம் வரையில் வந்து ரெயில் ஏற வேண்டியவர்களாயிருந்தோம். அதற்காக 16 வண்டிகளோ அதிகமோ, உத்தரவு செய்திருந்தோம். எங்களையும் எங்கள் சாமான்களையும் கொண்டு போக, நாழிகையாய் விட்டது. சீக்கிரம் புறப்பட வேண்டுமென்று, வண்டிகளைக் கட்டச் சொன்னால், அத்தனை வண்டிக்காரர்களும், (எந்த மதுவிலக்குச் சங்கத்திலும் அங்கத் தினராய்ச் சேராதவர்களானபடியினால்) நன்றாய்க் குடித்து விட்டு, படுக்கையை விட்டெழுந்திருக்கவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்! அதட்டிப் பார்த்தோம்! ஒன்றும் பயன்படவில்லை! இதென்ன கஷ்டகாலம் என்று நாங்கள் எல்லோரும் திகைத்து நிற்கையில், எங்கள் பிரயாண ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்து வந்த எனது நண்பர் பி.எஸ். தமோதர முதலியார், ஒரு யுக்தி செய்தார்; அவர் சாதாரணமாக ஆங்கில உடையே அப்பொழுது அணிவது வழக்கம்; அதன் பேரில், வெள்ளைக்காரர்கள் அணியும் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு சவுக்கை (Riding whip) எடுத்துக் கொண்டு, அந்த வண்டிக்காரர்கள் உறங்கிக்கொண்டிருக்குமிடம் போய், வெள்ளைக்காரர்கள் பேசுவது போல் தன் குரலை மாற்றி, “ஏ! கள்தைங்கோ ! எள்ந்தி கீரைங்களா இல்லியா?” என்று கூவித் தன் சவுக்கினால் இரண்டு மூன்று பெயர் முதுகில் வைத்தார் நன்றாக! உடனே அடிபட்டவர்களெல்லாம் தங்கள் முதுகையும், கண்ணையும் துடைத்துக்கொண்டு, விரைவில் எழுந்து, ‘அரேரேரே! தொர்ரே ஒச்சினார்ரா!’ (துரை வந்து விட்டாரடா!) என்று கூவிக் கொண்டு மற்றவர்களையும் எழுப்பி ஐந்து நிமிஷத்திற்குள், மாடுகளை யெல்லாம் வண்டிகளில் பூட்டி நிறுத்தி விட்டார்கள்! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பதினுண் மையும், வெள்ளைக்காரத் தொப்பிக்கு இவ்வளவு மகிமை இருக்கிறதென்பதையும் அன்று கண்டேன்!