பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

நாடக மேடை நினைவுகள்


முதலியோரே. பகலெல்லாம் வேலை செய்து விட்டு, இராத்திரி ஒன்பது பத்து மணிக்கு மேல் தெருக்கூத்துப் பார்க்கப் போய் அக்கூத்தை விடிய விடியக் காணும் பாமர ஜனங்களல்ல. ஆகவே, உத்தியோகஸ்தர்கள் முதலியோர், சாயங்கால ஆட்டத்தை ஒன்பது மணி வரையில் பார்த்துவிட்டு, வீட்டிற்குப் போய் 10 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு, உறங்குவதனாலுண்டான சௌகர்யத்தை அறிந்தவர்கள், பிறகு இராத்திரி நாடகங்களென்றால் வெறுக்க ஆரம்பித்தனர். இதன் பிறகு சீக்கிரத்தில் நாங்கள் இரவு நாடகமென்பதையே அடியுடன் விட்டு, இத்தனை வருஷ காலமாக, சாயங்காலத்தில்தான் ஆடி வருகிறோம். இதற்காக முக்கோடி ஏகாதசி அல்லது சிவராத்திரியில் நாடகம் வைத்துக்கொண்டால் மாத்திரம், இராத்திரியில் இப்பொழுது நாடகமாடுகிறோம். சென்னையிலுள்ள கற்றறிந்த நாடகாபி மானிகளுக்கு இவ்வழக்கத்தை நாங்கள் சகஜப்படுத்திய போதிலும், வெளியூர்களில் நாங்கள் போய் ஆடும்பொழுது, இந்த ஜபம் அங்கு சாயவில்லை! அங்கெல்லாம், “சாயங் காலத்தில் நாடகமாடுவதாவது! நாடகம் என்றால் இராத்திரியில்தான் ஆடவேண்டும்!” என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். அவர்களும் மெல்ல மெல்ல, நாளாவர்த்தத்தில் இவ்வழியைக் கடைப்பிடிப்பார்களென்று நம்புகிறேன்.

இவ்வருஷம் நான் “சபாபதி” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை நான் எழுத நேர்ந்த விதம் என் நண்பர்களுக்குக் கொஞ்சம் நகைப்பை உண்டாக்கு மாதலால், அதை இங்கெழுதுகிறேன். எனது பால்ய நண்பருக்கு, “சபாபதி” என்று கோச்மான் இருந்தான். அவனை அவர் கூப்பிடும் போதெல்லாம், “சபாபதி” என்று அந்த ப என்னும் அட்சரத்தை அதிகமாய்த் தொனித்துக் கூப்பிடுவார். “சபாபதி” என்று, அவரை ஏளனம் செய்யும் பொருட்டு, நானும் அவரைப்போல் “சப்பாபதி” என்று கூப்பிடுவேன். நான் இவ்வாறு அழைக்கும் போதெல்லாம், அவர் வீட்டிலிருப்பவர்களெல்லாம், குழந்தைகள் வேலைக் காரர்கள் உட்பட, நகைப்பார்கள்; எனது நண்பரும் சிரிப்பார். ஆகட்டும், இப்பெயர் வைத்து ஒரு நாடகம். எழுதுகிறேன் பார், என்று சொல்லி சபாபதி என்ற ஒரு வேலைக் காரனுடைய நாடகத்தை எழுதத் தலைப்பட்டேன்.