பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/362

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

347


அன்றியும் எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் நரசிம்மன் என்ற ஒரு ஐயங்கார் பிள்ளை வேலையாளாக இருந்தான். அவன் வாஸ்தவத்தில் கொஞ்சம் புத்திசாலியாக இருந்த போதிலும், மேற்பார்வைக்கு மட்டியைப் போல் தோற்றுவான். (இவன் இன்னும் உயிருடன் இருக்கிறானென நம்புகிறேன். அவனைப் பற்றி இவ்வாறு நான் எழுதுவதற்காக அவன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.) நானும் எனது நண்பரும் சீவரம் முதலிய ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் இவனை அவர். அழைத்துக் கொண்டு வருவார். இவனது செய்கைகள் எங்களுக்குப் பன்முறை நகைப்பை விளைவித்திருக்கிறது. இவனது செய்கைகள்தான், நான் எழுதிய சபாபதி நாடகத்தில், வேலைக்கார சபாபதியின் பாத்திரத்திற்கு அஸ்திவாரமாயது. அன்றியும் செர்வான்டிஸ் (Cervantes) என்னும் ஸ்பெயின் தேசத்து ஆசிரியர் எழுதிய டான் குவிக்சோட் (Don Quixote) என்னும் கதையில், கதாநாயகனுக்கு சான்கோ பான்சா (Sancho Panza) என்னும் விகடனான ஒரு வேஷக்காரனைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களில் பலர் படித்திருக்கலாம்.

இதுபோலவே ஓர் ஆங்கில நவீனத்தில் ஹான்டி ஆன்டி என்னும் மூடவேலையாளைப் பற்றியும் எனது நண்பர்கள் படித்திருக்கலாம். இவைகளையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து, “சபாபதி” வேலையாளைச் சிருஷ்டித்தேன். மேலும், நகைப்பு உண்டாக்கத்தக்க, வேலைக்காரர்கள் செய்யும் தப்பிதங்களை யெல்லாம் கவனித்து, இந்தச் ‘சபாபதி’யின் தலையில் சுமத்தினேன். இவ்வாறே படிப்பில்லாத வாலிபர்கள் செய்யும் குற்றங்களையும் குறும்புகளையும் சேர்த்து சபாபதி முதலியாரை உண்டாக்கினேன். சில முதலியார் பிள்ளைகள் சரியாகப் படிக்காதபடி, தங்கள் வீட்டில் தாய் தந்தையர்களை ஏமாற்றும் விதத்தையும் கவனித்து, இதையெல்லாம் சேர்த்து, ‘சபாபதி’ என்னும் ஒரு சிறு பிரஹசனமாக (Farce) எழுதினேன். இதைப்பற்றி நான் இவ்வளவு விவரமாக எழுதுவதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தப் பிரஹசனத்தை வரவேற்று எனது