பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/363

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

நாடக மேடை நினைவுகள்


நண்பர்களில் அநேகர், ‘இந்தச் சபாபதியை எங்கே பிடித்தாய்?’ என்று என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் இச்சிறு நாடகத்தைப் பார்த்துச் சிரித்தவர்களெல்லாம், யாராவது வேலைக்காரன் தவறிழைத்தால் இவன் என்ன சபாபதியோ என்றும், இங்கிலீஷ் பேசுவதில் யாராவது தவறாகப் பேசினால், இவர் என்ன சபாபதி முதலியாரோ என்றும் கேட்பது சகஜமாய்விட்டது. தமிழ்நாட்டில், கற்றறிந்த இல்லங்களில் சபாபதியை அறியாதார் இல்லையென்று நான் ஒருவாறு கூறலாம். இதுதான் நான் முதன் முதல் எழுதிய பிரஹசனம். இது எல்லோருக்கும் விடா நகைப்பைத் தந்து, களிக்கச் செய்தமையால், சபாபதி இரண்டாம் பாகமென்றும், சபாபதி மூன்றாம் பாகமென்றும் பிறகு எழுதினேன். தற்காலம் நான்காம் பாகமென்றும் அச்சிட்டிருக்கிறேன். இந்தச் சபாபதி, ஒரு சிறு பிரஹசனமாயிருந்த போதிலும், 120 முறைக்குமேல், என் அனுமதியின்மீது ஆடப்பட்டிருக்கிறது; என் அனுமதியினின்றியும் சில முறை ஆட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமில்லை.

இந்தச் சபாபதி நாடகத்தில் வேலைக்கார சபாபதியின் பாகத்தை எனது பழைய நண்பர் தாமோதர முதலியார்தான் இந்திய நாடக மேடையை விட்டு நீங்குமளவும், மிகவும் விமரிசையாக ஆடி வந்தார். இந்தப் பாகத்தை ஆடுவதில் முக்கியமான . கஷ்டம் என்னவென்றால், முகத்தில் கொஞ்சமாவது புத்தியிருப்பதாகப் பிறர் அறியக் கூடாததேயாம்; கொஞ்சமாவது புத்தியுடையவன்போல் நடித்தாலும் இப்பாத்திரம் ரசாபாசமாகும். தாமோதர முதலியாருக்குப் பிறகு நண்பர் சி. பாலசுந்தர முதலியார் இதை நன்றாக நடித்து வந்தார். சபாபதி முதலியாரின் பாகத்தை அநேக வருஷங்களாக நான் நடித்து வருகிறேன். நான் எனது சிற்றறிவைக்கொண்டு சிருஷ்டித்த அநேக பாத்திரங்களில், மனோஹரனைப் போல் சபாபதி பாத்திரமும் நெடுநாள் ஜீவித்திருக்குமென நினைக்கிறேன்.