பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

நாடக மேடை நினைவுகள்


பின் எங்கள் சபையில் 2100 மெம்பர்களிலிருந்தபொழுது, அதை அறிந்திருப்பாராயின் இவர் என்ன சொல்லியிருப்பாரோ?

இவ்வருஷக் கடைசியில், சென்னைக்கு அச்சமயம் விஜயம் செய்த மைசூர் மகாராஜா அவர்கள் முன்னிலையில் எங்கள் சபையார், தெலுங்கில் ஹரிச்சந்திர நாடகத்தை நடத்தினார்கள்.

இவ்வருஷம் நான் ஒரு நூதன நாடகமும் எழுதியதாக ஞாபகமில்லை . ஆயினும் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் ‘சபலை’ என்னும் ஒரு நாடகத்தை எழுதினார். இது ஆங்கிலத்தில் ஹென்ரி உட் (Henry Wood) துரைசானி அவர்கள் ஈஸ்ட்லின் (East Lynne) என்னும் பெயர் வைத்து எழுதிய நவீனத்தின் தமிழ் நாடக அமைப்பாகும். இது எங்கள் சபையோரால் இவ்வருஷம் ஆடப்பட்டது. கிரந்தகர்த்தாவாகிய கிருஷ்ணசாமி ஐயர், நாடகத் தலைவியாகிய சபலை வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார். இது ஒரு துக்ககரமான நாடகம்; இதில் வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் உருக்கும்படி மிகவும் விமரிசையாக நடித்தார். இவர் நடித்திருக்கும் பெண் வேடங்களில் இது ஒரு முக்கியமானதாகும். இம்முறை இந் நாடகத்தில், எனதாருயிர் நண்பரும் சி. ரங்கவடிவேலுவும், நானும் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆயினும் இதே நாடகம் பிறகு ஆடியபொழுது, ரங்கவடிவேலு, வேலைக்காரியாகிய விஜயையாக நடித்திருக்கிறார். நானும் பன்முறை இந்நாடகத்தில் சுவர்ணகிரி ஜமீன்தாராக நடித்திருக்கிறேன்.

இவ் வருஷக் கடைசியில் எங்கள் சபையின் மற்றொரு அங்கத்தினராகிய சரசலோசன செட்டியார் என்பவர் எழுதிய “சரசாங்கி” என்னும் நாடகமும் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய சிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டது. இந்நூலாசிரியர் கதையைக் கொஞ்சம் மாற்றியும் எழுதியுள்ளார்; இவர் தமிழ் நன்றாகப் படித்தவர்; கவனம் செய்யும் சக்தியும் இவருக்குண்டு. இவர் இரண்டொரு வருஷத்திற்குள்ளாக மிகவும் சிறு வயதில் மரித்தது எல்லோருக்கும் விசனிக்கத்தக்க விஷயம்.