பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

351


1908ஆம் வருஷத்தில், சென்ற வருஷம் அ. கிருஷ்ண சாமி ஐயர் தமிழ் சப் கண்டக்டராகயிருந்தது மாறி, சி. ரங்கவடிவேலு தமிழ் சப் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். இவ்வருஷத்தில் நடந்தேறிய பல விஷயங்களை நான் குறிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபையின் நூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இந்த நூறாவது நாடகம் நடத்த 17 வருஷங்கள் பிடித்தன. நூறாவது நாடகமாக ‘அமலாதித்யன்’ நாடகத்தை நடத்தினோம். அதனால் வந்த மொத்த வரும்படி 652 ரூபாயை விக்டோரியா பப்ளிக் ஹால் என்கிற பெயரை உடைய இடத்தில் விக்டோரியா மகாராணியின் படமில்லாதிருந்த குறையைத் தீர்க்கச் செலவழித்து அப் படத்தை ஹாலில் ஸ்தாபித்தோம். இவ் வருஷம் என்னால் எழுதப்பட்ட இரண்டு புதிய தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன. முதலாவது ‘சிம்ஹௗ நாதன்’ என்பதாம். இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் சிம்பலின் எனும் பெயர் வைத்து எழுதிய நாடகத்தின் தமிழ் அமைப்பாம். இதற்கு முன் வருஷம் இக் கதையை “சரசாங்கி” என்னும் பெயர் வைத்து நாடக ரூபமாய் எழுதினதை எங்கள் சபையார் ஆடினபொழுது, ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதியதை மிகவும் மாற்றி எழுதியது என் மனத்திற்குப் பிடிக்கவில்லை. சாதாரணக் கதைகளை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி நாடக ரூபமாய் எழுதி விடலாம்; பெரியோர்கள் கையாண்ட கதைகளை அவ்வாறு மாற்றுவது உசிதமன்று என்பது என் துணிபு. என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், அக்கதையில் தான் கதாநாயகியின் பாகத்தை ஆட விரும்புவதாகத் தெரிவிக்கவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டு இதை விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது இவ்வருஷம் எங்கள் சபையோரால் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி ஆடப்பட்டது. இதில் எனதாருயிர் நண்பர், கதாநாயகியாகிய மோகினி (Imogen) வேடம் பூண்டனர். அதன்பேரில் மோகினியின் கணவனாகிய பாசதாமன் (Posthumus) வேடம் நான் பூண நேரிட்டது. இப் பாசதாமன் பாத்திரம் முக்கியமானதா யில்லாவிட்டாலும், எனது நண்பர் மற்றெவருடனும் நாடக மேடையில் ஆடமாட்டேன் என்கிற கொள்கையுடைய