பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நாடக மேடை நினைவுகள்


கொண்டிருந்தார்; மற்றொருபுறம் ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார்; இரண்டு பெயர் இரண்டு தம்புருகளை மீட்டிக்கொண்டிருந்தனர்; ஒத்திகை போட்டுக் கொண்டிருந்த நாடகமாகிய, அப்பாவு பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட “இந்திரசபா எனும் நாடகத்தில் அயன் ராஜபார்ட் எனும் சந்தனுமகராஜாவாக நடித்த வரதராஜலு நாயகர் என்பவர் கையில் ஒரு தாளமும் அவரது சிநேகிதர் ஒருவர் கையில் ஒரு தாளமும் வைத்துக்கொண்டு, காது செவிடு படும்படியாகத் தாளம்போட்டுக் கொண்டிருந்தனர்; எல்லாம் பாட்டுமயமாயிருந்தது! நான்கு ஐந்து பாட்டிற்கு இடையில் சில வார்த்தைகள் தப்பிப் பிழைத்து வந்தனவோ என்னவோ, எனக்குச் சந்தேகமாயிருந்தது. வரதராஜலு நாயகர் அவர்கள் ஒரு பாட்டில் ஒரு அடி பாடினவுடன் பின் பாட்டாக நான்கு ஐந்து பெயர் அதே அடியை உரக்கப் பாடுவார்கள்! இதையெல்லாம் வாய் திறவாது கேட்டுக்கொண்டிருந்த போதிலும், என் மனத்தில் மாத்திரம் கொஞ்சம் வெறுப்புத் தட்டியது. ஷேக்ஸ்பியர் மகாகவியின் சில நாடகங்களைப் படித்திருந்த எனக்கு இந்த இந்திரசபா எனும் நாடகமானது கொஞ்சமேனும் ருசிக்கவேயில்லை. சில ஆங்கிலேய நாடகங்களைப் பார்த்த எனக்கு இவர்கள் நடிக்கும் விதம் எள்ளளவேனும் பிடிக்கவில்லை. இந்த இந்திரசபா நாடகமானது, தற்காலத்தில் கோவலன் நாடகம் கொஞ்சம் பிரபலமாகி வாரத்திற்கொரு முறையாவது நடிக்கப்படுவது போல், அக்காலத்தில் பிரபலமாயிருந்து மாதத்திற்கொரு முறையாவது நடிக்கப்பட்டு வந்தது. ஒரே நாடகமானது, கடல் இந்திர சபா, மலை இந்திர சபா, கமல இந்திர சபா, அக்கினி இந்திர சபா எனும் இப்படிப்பட்ட வேறு வேறு பெயர்களுடன் ஆடப்பட்டு வந்தது. இக்கதையிலுள்ள ஆபாசங்களில் ஒன்றை மாத்திரம் இங்கே எடுத்துக் கூறுகிறேன். இந்நாடகத்தில் கதாநாயகன் சந்திரவம்சத்தரசனாகிய சந்தனு ; இவன் வேட்டையாடி விட்டுக் கானகத்தில் உறங்குங்கால் ஊர்வசியெனும் அப்சரக் கன்னிகை இவனைக் கண்டு மோகம் கொள்கிறாளாம். இச்சந்தர்ப்பத்தில் சந்தனு எனும் பதத்தை சந்தனம் என்று மாற்றி, ஊர்வசி கானகத்தில் வந்தவுடன் சந்தன வாடை வீசுகிறதாகத் தெரிவிக்கிறாள். சந்தனு ஊர்வசியால் எழுப்பப் பட்டவுடன், திடீரென்று உண்டான