பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

நாடக மேடை நினைவுகள்


ஆயுசுபர்யந்தம் அத்யந்த நண்பராயிருந்தவர். இவர் தான் நாடக மேடையில் வர வேண்டுமென்று இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவிக்க, அவர் உருவத்திற்குத் தக்க வேடம் கொடுக்க வேண்டுமென்று யோசித்தவனாய், மோகினி, ஆர்வராகன், கிரிதரன், இவர்களுடைய வளர்ப்புத் தந்தை யாகிய பாலராயன் (Balarius) பாத்திரம் இவருக்குக் கொடுத்தேன். இவர் எங்கள் நாடக மேடையில் வருவது இதுதான் முதல் முறையாயிருந்த போதிலும், கொஞ்சமும் கூச்சமின்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த மற்ற அரிய குணங்களுடன், நாடக மேடையைச் சேர்ந்த ஓர் அரிய குணம் என்னவென்றால், தனக்குரிய பாடத்தில், தானும் ஒரு எழுத்து விட மாட்டார்; தன்னுடன் வரும் இதர நாடகப் பாத்திரங்களும் ஓர் எழுத்து விட்டுவிடச் சம்மதியார்; ஒத்திகைகளில் தன்னுடன் வரும் யாராவது ஆக்டர், எதை விட்டபோதிலும், அதை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவர் அதைச் சரியாக ஒப்புவிக்கும் வரையில் விட மாட்டார்! இவ்வாறு தன் பாடத்தைப் படிப்பதுமன்றித் தன்னுடன் வரும் மற்ற ஆக்டர்களின் பாடத்தையும் படித்து வைப்பார்! இவர் எங்கள் சபையில், இது முதல் பன்முறை வேடங்கள் தரித்து ஆடியிருக்கின்றனர். இவருக்கு ‘பிஸ்தாக் கொட்டை சாமியார்’ என்று எங்கள் சபையில் பெயர் வந்ததற்குக் காரணம் பிறகு எழுதுகிறேன்.

இவர், படித்தவர்கள் அநேகரைக் கொள்ளை கொள்ளும் நீர் வியாதியால், நடுவயதில் அகால மரணமடைந்தார். இவர் மரணத்தினால் எங்கள் சபை ஒரு நல்ல ஆக்டரையும், நான் எனது அத்யந்த நண்பர்களில் ஒருவரையும் இழந்தேன். எங்கள் நட்பைப்பற்றி ஒரு சிறு விஷயம் இங்கெழுத அனுமதி கேட்கிறேன். இவரை நான் அறிவதன் முன்னர், சிற்றுண்டிக்காவது, விருந்திற்காவது எங்கு சென்ற போதிலும், நானும் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலுவும் ஒன்றாய் உட்கார்ந்து உண்போம். இவரைத் தெரிந்த பிறகு, நாங்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்துண் பவர்களானோம். எந்தப் பார்ட்டிக்காவது விருந்துக்காவது போனபோதிலும், நாங்கள் எங்கிருக்கிறோமென்று அவர் எங்களைத் தேடி வந்து எங்களுடன் உட்காருவார்; நாங்களும் அவர் எங்கிருக்கிறார் என்று தேடி அவரிடம்