பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

நாடக மேடை நினைவுகள்


தோழனுடையதாம். இதை இந்நாடகத்தை வாசித்திருக்கும் என் நண்பர்கள் நன்றாயறிவார்கள். ஒருவிதத்தில் இந்தத் தத்தனையே கதாநாயகனெனவும் கூறலாம். அவ்வளவு முக்கியமான பாத்திரம் அது; இதை எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியாருக்கென்றே எழுதினேன். நான் இதை எழுதி முடித்து, அவர் தன் பாகத்தை யெல்லாம் எழுதிக்கொண்டவுடன், (அப்பொழுது இந்நாடகம் அச்சிடப்படவில்லை) அவருடைய ஆபீசுக்காரர்கள் அவரை திடீரென்று ரங்கூனுக்கு மாற்றி விட்டார்கள். அதன் பேரில் அவர் திரும்பிப் பட்டணம் வந்து சேர்ந்து இந்நாடகத்தில் நடிக்கும் வரையில், வேறு மற்றவர்களைக் கொண்டு இந்நாடகத்தை நடிப்பதில்லை என்று தீர்மானித்தவனாய், ஒரு வருஷ காலத்துக்குமேல் அவர் வரவை எதிர்பார்த்து, இதை ஆடாது விட்டுவைத்தேன், இவ்வாறு அவருக்காக இதை நிறுத்தி வைத்ததற்காக என்னைக் கடிந்து கொண்ட எனது நண்பர்களும், அவர் திரும்பி வந்து இவ்வருஷம் இந்நாடகத்தில் தத்தனாக நடித்ததைக் கண்ட பிறகு, நான் செய்தது சரியென ஒப்புக்கொண்டனர். அவ்வளவு நன்றாக நடித்தார் அவர். இந்நாடகமானது, அதே சபையாரால் (பால நாடக சபைகள் உள்பட) பன்முறை ஆடப்பட்டிருப்பதாலும், நான் எழுதிய நாடகங்களைப் படிப்பவர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருப்பதாலும், இந்நாடகக் கதையைப் பற்றிச் சில விஷயங்கள் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இந்த நாடகக் கதை என் மனத்தில் உதிக்குமுன், இதன் பெயர், ‘வேதாள உலகம்’என்பது என் மனத்தில் உதித்தது! சாதாரணமாக, ஒரு நாடகத்தை எழுதி முடித்த பிறகுதான் அதற்கு என்ன ஏற்ற பெயர் வைக்கலாம் என்று பெரும்பாலும் நாடகாசிரியர்கள் யோசிப்பது வழக்கமாம். இதிலோ பெயரை முன்பு தீர்மானித்து, அப்பெயருக் கேற்றபடி, நாடகக் கதையை எழுதலானேன்! இப்பெயர் என் மனத்தில் உதித்ததற்கு ஒரு விநோதமான காரணம் உண்டு. இதற்கு முன்னால் சென்னைக்கு ஒரு புதிய பாரசீகக் கம்பெனியார் வந்து, ஹிந்துஸ்தானி பாஷையில் பல நாடகங்களை ஆடியதைப்பற்றி எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் முதன் முதல் ஆடிய