பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/374

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

359


நாடகத்திற்கு “பஹாரி பரிஸ்தான்” (Bhari Paristan) என்று பெயர். எப்படி எங்கள் சுகுண விலாச சபையார், மற்ற ஊர்களுக்குப் போகும் பொழுதெல்லாம்,“லீலாவதி-சுலோசனை”யை முதல் நாடகமாகப் பல வருஷங்கள் நடத்தி வந்தார்களோ அப்படியே இப்பாரசீகக் கம்பெனியார், எந்த ஊரில் போய் ஆட ஆரம்பித்த போதிலும், இந்த “பஹாரி பரிஸ்தான்” என்பதையே தங்கள் முதல் நாடகமாக ஆடுவதாக வழக்கமுடையவராயிருந்தனர்.

இவர்கள் முதன்முறை இதை ஆடியபொழுது நான் போய்ப் பார்க்கவில்லை. இரண்டாம் முறை ஆடியபொழுது இதைப்போய்ப் பார்த்தேன். இதில் முக்கியமாக வினோதமாக ஜோடிக்கப்பட்ட காட்சிகள் பல இருந்தனவேயொழிய, ஆக்ட் செய்வதில் அத்தனை விசேஷமாக இல்லை என்று என் புத்தியிற் பட்டபோதிலும், ஒரு காட்சி மாத்திரம் என் மனத்தில் நன்றாய் வேர் கொண்டது. அதாவது, கதா நாயகனான ஒரு வாலிப ராஜகுமாரன், தன் தோழனுடன் காட்டில் உழன்றபொழுது, ஒரு குளிகையைப் பெற்று, அங்கு தோன்றிய ஒரு குகைக்கெதிரில் போய் அக் குளிகையைக் காண்பிக்க, அக்குகை வெடித்து, தான் நெடுநாளாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்த பரிஸ்தான், அல்லது பரிகள் உலகம் என்பதைக் காண்கிறான். பரிஸ்தான் என்பதற்குப் பரிகள் அல்லது அப்சரக் கன்னிகைகள் வசிக்கும் உலகம் என்று பொருள் கூறலாம். இக்காட்சியை அமைத்துத் தமிழில் ஒரு நாடகம் நாம் எழுதவேண்டும் என்று மனத்திற்பட்டது. உடனே, மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கக் குகை வெடித்து ராஜ குமாரனை அப்சரக் கன்னிகைகள் அப்சரலோகத்துக் அழைத்துக் கொண்டு போவது போலவும், அக்குகை மூடிக் கொள்ள மந்திரத்தைச் சரியாக உச்சரிக்காது தவறாகச் சொல்ல, அவன் தோழனை, குகை வெடித்து வந்த வேதாளங்கள் தூக்கிக்கொண்டு போவதுபோலவும் எழுதினால் மிகவும் வேடிக்கையாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே நான் எழுதப் போகிற நாடகத்திற்கு “வேதாள உலகம்” என்று பெயர் வைத்தால் நலமாயிருக்கு மெனத் தீர்மானித்தேன். இவ்வாறு நாடகத்தின் பெயரை முன்பு தீர்மானித்து, பிறகு அதற்கேற்றபடி நாடகக்