பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/375

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

நாடக மேடை நினைவுகள்


கதையைக் கோர்த்துக் கொண்டேன். அரண்மனையில் ரகசியமாய் வைத்திருந்த ஒரு சித்திரப் படத்தைக் கண்டு கதாநாயகியின்மீது ராஜகுமாரன் காதல் கொண்டதற்கு அஸ்திவாரமாயிருந்தது, நான் சிறு வயதில் படித்த தக்காணத்துப் பூர்வ கதைகளுள் ஒன்றாம். தத்தனுடைய பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய பால்ஸ்டாப் (Falstaff) பாத்திரமென்று ஒருவாறு கூறலாம். ஆயினும் உருவத்திலும், அகட விடகத்திலும் அந்த பால்ஸ்டாப்பை தத்தர் ஒத்திருந்தபோதிலும், இந் நாடகத்தின் முதற்காட்சி, ஷேக்ஸ்பியர் நான்காம் ஹென்ரி (Henry IV) என்னும் நாடகத்தில் எழுதியுள்ள ஒரு காட்சியை ஒத்திருந்தபோதிலும், பிறகு வரும் காட்சிகளில் அவரெழுதியுள்ள நாடகத்திற்கும் நான் எழுதியுள்ள நாடகத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை . மேலுக்கு விகடனாகத் தோன்றிய போதிலும், இத் தத்தனிடம், அவனது நண்பனாகிய ராஜகுமாரன்மேல் அவன் பொருட்டுத் தன் உயிரையும் கொடுக்கத் துணியும் படியான பேரன்புண்டு என்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக. நான் எனது சிற்றறிவைக் கொண்டு நிர்மித்த நாடகப் பாத்திரங்களுக்குள் இந்தத் தத்தன் பாத்திரம் ஒரு முக்கியமானது என்று நினைக்கிறேன். இந்நாடகமானது நடிக்கப்படும்பொழுது பார்த்த அல்லது இதை வாசித்துப் பார்த்த, அநேகம் ஆக்டர்கள், தாங்களும் இந்தத் தத்தன் வேடம் பூண வேண்டுமென்று விரும்பி எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான், நான் எழுதியுள்ள எல்லா நாடகங்களைப் பார்க்கிலும் மற்ற அநேக சபையார்களால் இந்நாடகம் அதிகமாக ஆடப்பட்டதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஹாஸ்ய பாகத்தில் நான் எழுதியவற்றுள் இது மிகச் சிறந்தது என்று எனது நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்தத் தத்தன் பாகம், அவருக்கென்றே எழுதப்பட்டபடியால் எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் இதில் எளிதில் பெரும் பெயர் பெற்றார். இவருக்குப் பிறகு இப்பாத்திரத்தில் பெயர் பெற்றவர் எனது நண்பர் எம். துரைசாமி ஐயங்காரே. இந்தப் பாத்திரத்தை எங்கள், சபையில் ஆக்ட் செய்த மற்ற ஆக்டர்கள், தாமோதர