பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

நாடக மேடை நினைவுகள்


தேகமுடையவர்கள் இப்பாத்திரத்தை ஆட விரும்பினால், உடல் முழுவதும் பெருத்திருப்பது போல் காட்டும்படியான (எம். துரைசாமி ஐயங்கார் செய்தபடி) ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது, என்னிடமுள்ள கணக்கின்படி 257 முறை ஆடப்பட்டிருக்கிறது.இந்த நாடகத்தை ஆடுவது அவ்வளவு கஷ்டமில்லை. ஆகவே புதிதாய் நியமிக்கப்பட்ட சபைகள் இதை எளிதில் ஆடலாம். இதை நடிக்கக் கற்பதும் கஷ்டமல்ல. எழுதியுள்ள வார்த்தைகளைச் சரியாகச் சொன்னாலே போதுமானது. நகைப்பை உண்டாக்கத்தக்க பல சந்தர்ப்பங்கள் இதில் இருப்பதால், எளிதில் சபையோரைச் சந்தோஷப்படச் செய்யக்கூடும். இந்நாடகத்தில் சில இடங்களில், ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கும்பொழுது எனது நண்பர் தாமோதர முதலியார், ‘இந்தக் கரகோஷம் உங்களுடையது என்று நினைத்து விடாதீர்கள். இது வேறொருவருக்குச் சார்ந்தது’ என்று வேடிக்கையாகச் சொல்லுவார்.

இந்நாடகத்தில், மூன்றாம் அங்கத்தில் மூன்றாம் காட்சியை நடிக்கும் பொழுது அநேகம் சபையோர்கள் ஒரு தப்பிதம் செய்கிறார்கள். அன்றியும் அநேகம் பேர்கள் இதை எப்படி நடிப்பது என்று கேட்டிருக்கிறார்கள். ஆகவே இதைப்பற்றி இங்குத் தெளிவாய் எழுதுகிறேன். இக்காட்சியில், இரண்டு குகைகள் இருக்கின்றன. வலது புறம் குகையில் ராஜ குமாரன் அடைப்பட்டிருக்கிறான்; இடது புறம் குகையில் தத்தன் அடைக்கப்பட்டிருக்கிறான். மோகன வல்லியை மோசம் செய்யும் பொருட்டு, ராஜீவாட்சி, குகைக்குத் தன் முதுகைக் காட்டி நின்று, வலதுபுறம் குகையில் ராஜகுமாரனிருப்பதாகவும், இடது புறம் குகையில் தத்தனிருப்பதாகவும் சொல்லுகிறாள். இவளுக்கு எதிராக நிற்கும் மோகனவல்லிக்கு வலது புறம், ராஜகுமாரிக்கு இடதுபுறமாகும். அவளது இடது புறம், இவளுக்கு வலது புறமாகும். ஆகவே இக்காட்சியில் இவர்கள் இருவரும் பேசும்பொழுது, ராஜீவாட்சி குகைக்குத் தன் முதுகைக் காட்டி நிற்க வேண்டும்; மோகனவல்லி, சபையோருக்குச் சற்று முதுகைக் காட்டி நிற்க வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் சபையோருக்கு இந்தச் சூட்சமம் அர்த்தமாகாது.