பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

363


இவ் வருஷம் எங்கள் சபைக்கு ஒரு புஸ்தகசாலை (Library) ஏற்படுத்தினோம்; நான். அதுவரையில் சேகரித்து வைத்த தமிழ் நாடகப் புஸ்தகங்களையெல்லாம் கொடுத்து, மற்ற அங்கத்தினர்களிடமிருந்தும், இலவசமாக, அநேக நாடக புஸ்தகங்களைச் சேர்த்து, ஒரு சிறு புஸ்தகசாலையாக்கி, இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தின் கடைசியில் விஜயதசமியன்று, இதை வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கொண்டு திறந்து வைத்தோம். அப்பொழுது 180 புஸ்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்காலம் 1670 புஸ்தகங்கள் அடங்கியதாயிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நான்கு திராவிட பாஷைகளிலுமுள்ள நாடகங்களை யெல்லாம் இதில் சேர்த்து வைக்கவேண்டுமென்பது எங்கள் கருத்து. இதை வாசிக்கும் எனது நண்பர்களிடம் அப்படிப்பட்ட புஸ்தகங்களிருக்கு மாயின், அவற்றை அவர்கள் இப் புஸ்தக சபைக்கு உதவுவார்களானால், எங்கள் சபை அவர்களுக்கு நன்றி பாராட்டும்.

அன்றியும் இவ் வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் 500 பெயர் ஆனார்கள். 500ஆவது அங்கத்தினர் ஹைகோர்ட்டில் அட்வகேட் ஜெனரலாயிருந்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள். அவர் எங்கள் சபையின் வழக்கப்படி, இவ் வருஷம் நவம்பர் மாசம் 15ஆம் தேதி ஒரு பெரும் விருந்தளித்தார். அதில் சபையின் சரித்திரத்தைச் சார்ந்த துணுக்குகளை (Tit-bits) யெல்லாம் சேர்த்து ஒரு காட்சியாகக் காட்டினேன். சபை ஆரம்பித்து, 17 வருஷங்கள் பொறுத்துத்தான் 500 அங்கத்தினர் களானோம்.

மேற்கூறிய இரண்டு நாடகங்களன்றி, நான் இவ் வருஷம் தசராவின் முதல் நாள் ஆட வேண்டியதற்காக, “காமோத்யானம்” (The Garden of Love) என்கிற ஒரு சிறு நாடிகையை எழுதினேன். அதை இன்னும் நான் அச்சிடவில்லை . இவ் வருஷம் அதையும், நான் பிறகு எழுதியுள்ள இன்னும் சில சிறு காட்சிகளையும் சேர்த்து, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயர் வைத்து அச்சிடலா மென்றிருக்கிறேன். அன்றியும் ‘சபாபதி முதலியார், ஒரு வருடம் பொறுத்து’ என்று ஒரு காட்சி தசராவுக்காக