பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

365


தெரிவித்தார்கள். இந்தத் தர்மசங்கட சந்தர்ப்பத்திற்கு நான் என்ன சொல்வது? நான் அவ்வாறு மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடக்கூடாது என்று எப்பொழுதும் தீர்மானம் செய்துகொண்டவனல்லன். எனதுயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதற்குத் தனக்கு இஷ்டமில்லை என்று எனக்குத் தெரிவித்த பிறகு, நானும் அவருடனன்றி மற்றவர்களுடன் அரங்கில் ஆடுவதில்லையென்று தீர்மானித்ததன்றி வேறொன்றும் கிடையாது. ஆகவே, இதற்குமுன் எங்கள் சபையோரால் ஆடப்பட்ட மற்றவர்கள் எழுதிய இரண்டொரு நாடகங்களில், நாங்களிருவரும் ஒன்றாய் ஆடக்கூடிய தக்க பாத்திரங்கள் கிடைக்காமையால், அப்படிச் செய்யவில்லை. இதுதான் உண்மை . இது இப்படியிருக்க, நான் இதரர்களு டைய நாடகங்களில் ஆடக்கூடாது என்கிற கொள்கை உடையவனாயிருந்தேன் என்று வீண் அபவாதம் மற்றவர்களுடைய மனத்தில் இருந்தால் இதற்கு நான் என் செய்வது? இதற்குப் பிறகு நானும் என்னுயிர் நண்பரும் மற்ற நூலாசிரியர்கள் எழுதிய நாகடங்களில் பலவற்றை ஆடியிருக்கிறோம். உலகில் இத்தகைய தவறான எண்ணங்கள் உண்டாவதைத் தடுக்க யாரால் முடியும்?

இவ் வருஷம் நடந்த மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென்றால், எங்கள் சபையார் ராஜப்பிரதிநிதி (Viceroy) லார்ட் மின்டோ (Lord Minto) சென்னைக்கு விஜயம் செய்த பொழுது, காஸ்மாபாலிடன் கிளப்பில், அவருக்குப் பெரும் விருந் தொன்று அளித்தகாலையில், அவர் முன்னிலையில் நடித்ததேயாம். இராஜப்பிரதிநிதிக்கு மேற்சொன்ன கிளப்பார் உபசரணை செய்ய வேண்டு மென்று தீர்மானித்தவுடன் எங்கள் குடும்ப சிநேகிதராகிய காலஞ்சென்ற பிட்டி. தியாகராய செட்டியார் அவர்கள் என்னை அழைத்து “சுகுண விலாச சபையார் ஒரு மணி நேரத்திற்கு ஏதாவது காட்சிகள் ஆட வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் நீ செய்துவிடு” என்று சொன்னார். ‘ஆகட்டும்’ என்று ஒப்புக் கொண்டு அநேகம் ஆக்டர்கள் வரக்கூடியதாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் முதல் - அங்கம் நான்காவது காட்சியை ஆடத் தீர்மானித்தோம்.