பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

நாடக மேடை நினைவுகள்


அன்றியும் ஹரிச்சந்திர நாடகத்திலிருந்து சில தோற்றக் காட்சிகளைக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்தோம். எல்லாம் தீர்மானித்தான பிறகு, நாடகத்திற்கு இரண்டு நாள் முன்னதாக பிட்டி. தியாகராய செட்டியார் என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார்; என்னவென்று போய்க் கேட்க “ரங்கவடிவேலுக்கு நாட்டியம் ஆடத் தெரியுமாமே, எப்படியாவது அதையும் காண்பிக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். காட்சியின் மத்தியில் அது வர இடமில்லையே என்று நான் எவ்வளவு ஆட்சேபித்தும், “அதெல்லாம் உதவாது. எப்படியாவது அதை நீ ஏற்பாடு செய்துதான் தீரவேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார். அதன்பேரில் சபைக்கு வந்து எனதுயிர் நண்பனுடன் கலந்து பேசியபொழுது, அவரும் அவர்களுக்கெதிரில் ஆட வேண்டுமென்று இச்சை கொண்டிருப்பதை அறிந்தேன். அதன்மீது, சரியென்று ஒப்புக்கொண்டு, நான் எழுதிய நாடகத்திலில்லாத ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் காட்சியின் முடிவில் அவரை நாட்டியம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன். ஏறக்குறைய ஆறு மாதம் எனதுயிர் நண்பர் கற்றுக்கொண்டு, இரண்டொரு முறை சபையில் ஆடியதைப் பார்த்தவர்களெல்லாம் மெச்சியது, எப்படியோ பிட்டி. தியாகராய செட்டியார் செவிக்கு எட்டி, இவ்வாறு அவர் பலாத்காரம் செய்யும்படி நேரிட்டது போலும்.

அன்றைத் தினம் காட்சியின் கடைசியில் எனதுயிர் நண்பர் நாட்டியம் ஆடியது எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததெனச் சொல்வது அதிகமாகாது. இவருக்கு முன் ஆமெடுர் (Amateur) நாடக மேடையில் இப் பரத சாஸ்திரம் கற்றவர்கள் இல்லையென்றே சொல்லவேண்டும். ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவதே கடினம்; அதுவும் ஸ்திரீயைப் போல் நர்த்தனம் செய்வதென்றால் அதிலும் கடினம்; எனதுயிர் நண்பர் இக்கலையைக் கற்க ஆரம்பித்தபோது, சில மாதங்கள், தான் தக்க தேர்ச்சியடையும் வரையில், எனக்குக்கூடத் தெரியாதபடி ரகசியமாய் வைத்திருந்தார். பிறகு தக்கபடி கற்றபின் என்னை மாத்திரம் தனியாக வரவழைத்து, ஆடிக் காண்பித்தார். நான் மிகவும் நன்றாயிருக்கிறதென . ஒப்புக்கொண்ட பின்புதான் எங்கள் சபையில் ஆட ஆரம்பித்தார். இவருக்குப் பிறகு, எனது நண்பர்களில் அனேகர் இக்கடினமான பரத சாஸ்திரத்தைக்