பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/383

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

நாடக மேடை நினைவுகள்


“இதென்ன அங்கிருந்தே பேசுகிறீர்களே!” என்று மெல்லக் கேட்டார். ‘பிறகு அதற்குப் பதில் சொல்லுகிறேன், காட்சி முடியட்டும்’ என்று சமாதானம் சொல்லிக் காட்சியெல்லாம் ஆடி முடிந்தவுடன், நான் உட்கார்ந்தே பேசியதன் காரணத்தை அவருக்கும், என்னுடன் நடித்த மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற எல்லோரும் நகைத்தனர். இதை நான் இங்கெடுத்தெழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மாதிரியான அசந்தர்ப்பங்கள் சில முறை நாடக மேடையில் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் சபையிலேயே ஒரு ஆக்டருடைய ஆடையவ்வளவும் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டது! தெய்வாதீனமாக, அவர் உள்ளே சிறு நிஜார் ஒன்று அணிந்திருந்தார்! ஆகவே ஆக்டர்களெல்லாம் இதைக் கவனித்து, வேகமாக ஏதாவது நடிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தால் அச்சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை அலங்கோல மாகாதபடி, முன்பே அதைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அதி அவசியம். அது முதல் இது வரையில் நான் மனோஹரன் முதலிய வேஷங்கள் தரிக்கும் போதெல்லாம், நாடகம் ஆரம்பத்திற்கு முன், கீழே விழுந்தோ ஓடியோ ஆடை அலங்கோலமாகப் போகத்தக்க சந்தர்ப்பமிருந்தால், அதைத் திரைக்குப் பின் நடித்துப் பார்த்து, நான் அணியும் உடை நெகிழாமலிருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது வழக்கமாய் விட்டது; எனது இளய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களென்றே இதை எழுதலானேன்.

இனி 1910ஆம் வருஷம் எங்கள் சபையில் நிகழ்ந்த முக்கியக் காரியங்களை யெழுதுகிறேன். இவ்வருஷம் எங்கள் சபையோரால் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குக் கொடுக்கப்பட்ட, காலஞ் சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியின் படமானது சென்னை கவர்னர், சர் ஆர்தர்லாலி (Sir Arthur Lawley) என்பவரால் திறக்கப்பட்டது. அச்சமயம் வேதம் வெங்கடாசல ஐயரவர்கள் எழுதிய ராணியின் சொப்பனம் என்னும் ஒரு சிறு நாடிகை ஆடப்பட்டது; சில தோற்றக் காட்சிகளையும் காட்டினோம். கவர்னர் அவர்கள் சபையை மிகவும் சிலாகித்துப் பேசினார்.

இவ்வருஷம் சபையின் ஆரம்ப முதல் கண்டக்டராயிருந்த வி. திருமலைப்பிள்ளையவர்கள், வயது மேலிட்ட