பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/389

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

நாடக மேடை நினைவுகள்


எளிதில் மாற்ற எவருக்கும் ஆற்றல் கிடையாது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனே. பாமர ஜனங்கள் இன்னும் நாடகம் பார்க்கப் போனால், சங்கீதத்தையே கவனிக்கின்றனர் என்பது திண்ணம். இருந்த போதிலும், கற்றறிந்தவர்கள், எந்த நாடகத்திற்கும் சங்கீதம் இருந்துதான் தீரவேண்டும் என்னும் கொள்கையினின்றும் சிறிது மாறியிருக்கின்றனர் என்று உறுதியாய்க் கூறலாம். இவ்விஷயத்தில், இதை வாசிக்கும் நாடகப் பிரியர்களாகிய எனது நண்பர்கள் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. ஐரோப்பா முதலிய கண்டங்களில் நாடகங்களில் சங்கீத மென்பதில்லாமற் போகவில்லை. ஆயினும் அவ்விட மெல்லாம் நாடகங்கள், முக்கியமாக இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; டிராமா பிராபர் (Drama proper), ஆபெரா (Opera) என்று இருவகை. முதற் சொல்லப்பட்டதில் சங்கீதமே கிடையாது; இரண்டாவது பிரிவில் சங்கீதம் முற்பட்டதாம்; வசனங்கள் இங்கும் அங்குமாக, ஏதோ கொஞ்சம் இருக்கும். நம்முடைய தேசத்திலும் நாடகங்கள் இவ்வாறு பிரிக்கப்பட வேண்டுமென்பது என்னுடைய கருத்து. புராண சம்பந்தமான ‘நந்தனார் சரித்திரம்,’ ‘ராமதாஸ் சரித்திரம்,’ ‘அரிச்சந்திர நாடகம்’ முதலிய நாடகங்களில் சங்கீதத்திற்கு வேண்டிய அளவு இடங்களிருக்கலாம். ஆயினும் தற்காலத்திய ஜன சமூக நாடகங்களில் சங்கீதமே இல்லாமலிருக்க வேண்டும் என்பதுதான் என் துணிபு. இந்த எண்ணமானது ஈடேற, இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இருந்த போதிலும், எனதாயுளில் இது ஆரம்பிக்கப்பட்டதே என்று ஈசனைப் போற்றுகிறேன்.

இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு பங்கஜவல்லியாகிய கதா நாயகியாக மிகவும் நன்றாக நடித்தார். நான் கதாநாயகனான ராமச்சந்திரன் வேடம் பூண்டேன். நான் ராமச்சந்திரனாக நடித்தபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ராமச்சந்திரனாகிய கதாநாயகன் ஒரு வைத்தியன். அவன் க்ஷயத்திற்காக ஒரு மருந்தைக்கண்டு பிடித்திருந்தான். அதை அவன். சிறு வயதில் மணந்து பிறகு மரணமடைந்ததாக நினைத்திருந்த அவனது மனைவி பங்கஜவல்லி, அப்பிரிவாற்றாமையே