பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நாடக மேடை நினைவுகள்


பார்த்துக் கொள்வோம், இப்பொழுது ஒத்திகை தாளங்கள் இல்லாமல் ஆரம்பிப்போம்” என்று கூறினேன். வேறுவழியில்லாமல் அதற்குடன்பட்டு, நாடகப் பாத்திரங்களெல்லாம் ஒத்திகை ஆரம்பித்தார்கள். அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒவ்வொரு அங்கத்தினருடனும் மெல்லப் பேசி, தாளம் இல்லாவிட்டால் தவறு ஒன்றுமில்லை யென்றும், தாளத்துடன் பாடுவதைவிட தாளம் போடாமலே பாடுவது அழகாயிருக்கிற தென்றும், தாளத்தைத் தட்டிக் கொண்டு பாடுவது தற்கால நாகரிக நாடகங்களுக்குப் பொருத்தமாக இல்லையென்றும் ரூபித்துக் காட்டினேன். வரதராஜுலு நாயகர் தவிர மற்றவர்களெல்லாம் மெல்லமெல்ல என் வழிக்கு வந்தனர். அவர் மாத்திரம் எனக்கு ஞாபகமிருக்கிறபடி கடைசிவரையில் எனது எண்ணம் சரியானதென்று ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பாடும் பொழுது தாளங்கள் தட்டுவதை அறவே விட்டபிறகே, நான் செய்த களவினைக் கூறி அத்தாளங்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து சொந்தக்காரரிடம் அவைகளை ஒப்புவித்தேன். இந்தத் தாளங்கள் விஷயமாக வரதராஜுலு நாயகருக்குக் கோபம் பிறந்து “இந்திர சபா என்னும் நாடகத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். அதன்மீது நிர்வாக சபைக் கூட்டத்தில் முதல் முதல் சபையார் ஆட என்ன நாடகம் எடுத்துக் கொள்வது எனும் கேள்வி பிறந்தது. அச்சமயம் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த சில பழைய தமிழ் வித்வான்களைக் கொண்டு எழுதி வைத்த ஒன்றிரண்டு தமிழ் நாடகங்களைப் படித்துக் காட்டினார். அதில் அக்காலத்திய குஜிலிகடை நாடகங்களி லிருந்த ஆபாசங்களெல்லாம் இருந்தன. அதை எழுதிய வித்வான்கள் மீது குற்றங் கூற வந்தவனன்று நான். அவர்கள் பழைய வழக்கப்படி யெழுதியிருந்தார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். அரசன் சபைக்கு வந்தவுடன், மந்திரியைப் பார்த்து, “மாதம் மும்மாரி பெய்கிறதா? பிராமணர்கள் யாகங்களைச் செய்கிறார்களா? க்ஷத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? வைசியர் சரிவர வியாபாரம் செய்கிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் மந்திரி “ஆமாம்” என்று விடை கொடுப்பதாக எழுதியிருந்தது.