பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

375


முக்கியக் காரணமாக நேரிட்ட க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டபொழுது, பங்கஜவல்லிக்கு அம் மருந்தைக் கொடுத்துச் சிகிச்சை செய்கிறான் என்பது கதையின் ஒரு பாகம். இதை நான் மேடையின்மீது தக்கபடி நடித்துக் காட்ட வேண்டி, வைத்தியப் பரீட்சையில் தேறி வைத்தியர்களாயிருக்கும் எனது சில நண்பர்களிடம் சென்று, க்ஷயரோகம் பிடித்த ஒரு நோயாளியை - அதிலும் ஒரு பால்ய ஸ்திரீயை - எப்படிப் பரிசோதிப்பது? நாடியை எப்படிப் பார்ப்பது? ஹிருதயத்தை எப்படிக் கவனிப்பது? ஸ்வாசாசயத்தை எப்படிப் பரீட்சிப்பது? முதலிய எல்லா விவரங்களையும் நன்கு கற்றேன். பிறகு மேடையின்மீது அந்தக் காட்சி வந்தபொழுது, அதன்படியே, வைத்தியனாக நோயாளியைப் பரிசோதித்தேன். நாம் எல்லாம் சரியாகச் செய்துவிட்டோம் என்று கொஞ்சம் கர்வப்பட்டேன் என்றே நான் சொல்ல வேண்டும். ஏனெனில், வந்திருந்தவர்க ளெல்லாம் இக்காட்சியானது மிகவும் நன்றாக நடிக்கப்பட்ட தெனக்கரகோஷம் செய்தனரன்றோ ? ஆயினும், ஒரு தப்பிதம் செய்தேன் என்பதை நாடக முடிவிற் கண்டேன். அக்காலத்தில், எங்கள் சபையார் தமிழ் நாடகங்கள் போடும் போதெல்லாம் ஏறக்குறைய தவறாமல் எல்லாவற்றிற்கும் வந்திருந்த காலஞ்சென்ற டாக்டர் நாயர் என்பவர் (இவர் இங்கிலாந்து தேசம் போய் எம்.டி. பட்டம் பெற்ற பிரபல வைத்தியர் என்பதை இதை வாசிப்பவர்களுக்கு நான் கூற வேண்டியதில்லை) நாடகம் முடிந்தவுடன், மேடைக்குள் வந்து -ரங்கவடிவேலுவையும் என்னையும் ஏதோ கொஞ்சம் சிலாகித்துப் பேசிவிட்டு, “ஆயினும் சம்பந்தம்! ஒரு தப்பிதம் செய்தாய்!” என்றார்.

என்னவென்று நான் வினவ, “எந்த வைத்தியனாவது தர்மா மிடரை (Thermometer-ஜுரம் பார்க்கும் கருவி) நோயாளியின் நாவில் வைத்து, பிறகு அதனை எடுத்துக் கழுவாமல், அதன் உறையில் போட்டதைப் பார்த்திருக்கிறாயா? சாதாரண நோயாளியாயிருந்தாலே பெரும் தப்பிதமாம். அதிலும் க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்ட நோயாளி!” என்று பதில் உரைத்தார். நாங்களிருவரும் சம்பாஷித்தது ஆங்கிலத்தில்; இங்கு அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதன்மீது வைத்தியர்கள் முறைப்படி