பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/391

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

376


மிகவும் நன்றாய் ஆடிவிட்டோம் என்கிற கர்வம் அடங்கினவனாய், தலை வணங்கி என் தப்பிதத்தை ஒப்புக்கொண்டு, அது முதல் இந் நாடகத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம் இந்தத் தப்பிதம் செய்யாதபடி நடந்து வருகிறேன். நாடக மேடையில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு இதனால் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஏதாவது வேடம் பூண்டால், அதற்குரிய விஷயங்கள் எவ்வளவு அற்பமானதா யிருந்தபோதிலும், கவனிக்க வேண்டுமென்பதே. இது ஒரு சிறு விஷயம், இதை யார் கவனிக்கப் போகிறார்கள்? என்று கருதலாகாது. அதை அறிந்த ஒரு புத்திமான் சபையில் வந்திருக்கலாம்; அவன் கண்ணுக்கு அக்குற்றம் எப்படியும் வெளிப்படையாகும்.

இந் நாடகத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், சாமிநாதனாக நடித்தார். அதை அவருக்கென்றே எழுதினேன். ஆயினும் அதை நடிப்பது அவருக்குக் கஷ்டமாயிருந்தது. இதற்குக் காரணம், அவர் ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாகயிருந்ததேயன்றி வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பொழுதே அவருக்கு எதையாவது குருட்டுப்பாடம் செய்வதென்றால் கஷ்டமாயிருந்தது. நடு வயதில் தமிழில் குருட்டுப் பாடம் செய்வதென்றால் அவருக்குப் பகீரதப் பிரயத்னம்தான்! அன்றியும் தமிழ் நாடக மேடையையேறி அறியாதவர் இதுவரையில்; ஆகவே மிகவும் கூச்சப்பட்டார். ஆயினும் நாடக தினம், மிகவும் நன்றாக நடித்தார். இதன் பிறகு இரண்டொருமுறை ஆங்கிலத்தில் இவர் நடித்தபோதிலும் இவர் தமிழ் நாடகத்தில் நடித்தது இதுதான் முதன் முறையும் கடைசி முறையுமாம். இவருக்குத் தெய்வ கடாட்சத்தினால் சென்ற வருஷம் ஷஷ்டி பூர்த்தியும் ஆகிவிட்டது. இனி இவர் நாடக மேடையில் தோன்றுவது மிகவும் அபூர்வமாம். மறுபடியும் இவர் நாட்க மேடை ஏறுவாராயின், எங்கள் சபையும் நானும் செய்த பெரும்பாக்கியமெனக் கொள்வேன். இவரிடம் நாடக மேடையைப் பற்றிய ஒரு பெருங்குணம் உண்டு. இவர் தானாக மேடையில் நடிக்க யாது காரணத்தினாலோ அவ்வளவு சக்தியில்லாதவராயிருந்த போதிலும், மற்றவர்களுக்கு இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுப்பதில் சிறந்த சக்தி வாய்ந்தவர். நாற்பது