பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

379


உனக்கு சஹானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தேன்! இப்பொழுது இதென்ன ராகமென்று கேட்கிறாயா?” என்று கூறி, ‘ராகத்திற்கும் உனக்கும் ரொம்பா தூரம். இப் பிரயத் தனத்தை விட்டுவிடு’ என்றேன். இது நடந்து அனேகம் வருஷங்களாயின; இருந்தும் இப்பொழுது இதை நான் எழுதும்பொழுது, எனக்கு அடங்காச் சிரிப்பு வருகிறது!

இவ்வாறு ஒரு ராகமும் தெரியாதவர் நாடக மேடை சங்கீதத்தைப் பற்றி எவ்விதம் ஆக்டர்களுக்குப் புத்திமதி கூறத்தக்கவராயிருக்கக்கூடும் என்று இதை வாசிக்கும் சிலர் சந்தேகிக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம், ‘இப்படிப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தட்டினால் அவரிடம் சென்று சில நேரம் சம்பாஷித்துப் பாருங்கள் பிறகு அவரது அரிய குணத்தை நன்றாய் அறிவீர்கள்’ என்று நான் பதில் உரைக்கக்கூடும். ஏதோ எனது பால்ய நண்பரை நான் புகழ்கிறேன் என்று நீங்கள் கருதலாகாது. புகழும் பொழுது, “நண்பனைக் காணாவிடத்தும்” என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை என் நண்பனாகப் பாவித்தது மன்றி, என் குருவாகவும் பாவிக்கின்றபடியால் அவரை நான் இவ்வாறு புகழ்வது தவறாகாது. நான் மேற்குறித்த பாட்டில், குருவை அவர் முன்னிலையிலும் அவர் இல்லாவிடத்தும் புகழலாம் என்றிருப்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.

இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தில், மற் றொரு முக்கியமான பாத்திரம் பங்கஜவல்லியின் அத்தையாகிய விதவை. காலஞ்சென்ற கா. ச. தேசிகாச்சாரியார் பி.ஏ., பி.எல். இவ்வேடம் பூண்டு மிகவும் நன்றாக நடித்தார். நாடக மேடையின்மீது, அநேகம் “விதவை”களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் அன்று நடித்ததைப் போல் அவ்வளவு நன்றாக நடித்தவர்களை இதுவரையில் கண்டிலன். இந்தத் தேசிகாச்சாரியார் பிறகு எங்கள் சபையில் வேஷம் தரிக்காதது எங்கள் சபை செய்த தௌர்ப் பாக்கியமென்றே சொல்ல வேண்டும். இவரைச் சாதாரணமாக ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளச் செய்வது மிகவும் கடினம்; எடுத்துக்கொண்டாரோ, அப்பாத்திரத்திற்கு ஏற்ற படி மிகவும் சாதுர்யமாக நடிக்கும் குணம் வாய்ந்திருந்தார்.