பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/395

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

நாடக மேடை நினைவுகள்


இப் பொன் விலங்குகள் என்னும் நாடகத்தில் “பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள்” என்று ஒரு பாத்திரமுண்டு. அது நான் எழுதிய ஹாஸ்ய பாகங்களில் அதி முக்கியமானது. நகைப்பை யுண்டுபண்ணும் பாத்திரங்களுள், “சபாபதிக்கு”ப் பிறகு இதைத்தான் எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பாத்திரத்தைக் காலஞ்சென்ற எனது நண்பர் டி.வி. கோபால்சாமி முதலியார் எடுத்துக்கொண்டார். அவர் மேடையின் மீது தோன்றியது முதல் கடைசி வரைக்கும் ஜனங்களுக்கு இடைவிடா நகைப்பையுண்டாக்கினார் என்பதற்கு ஐயமில்லை. இவர் இப் பாத்திரத்தை நன்றாக நடித்தமையால் இவருக்கு “பிஸ்தாக் கொட்டைச் சாமியார்” என்றே பெயர் வைத்து விட்டார்கள். இவரைப் பார்த்த அனைவரும், ஒருமுறை இவரே என்னிடம் அடியிற் கண்டிருக்கும் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்நாடகம் நடித்த சில நாட்கள் பொறுத்து, தென் இந்திய இரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் (தஞ்சாவூரோ என்னவோ, நன்றாய் எனக்கு ஞாபகமில்லை ), இவர் இந்நாடகத்தில் பிஸ்தாக் கொட்டைச் சாமியாராக நடித்ததைப் பார்த்திருந்த, ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த கனம் சதாசிவ ஐயரவர்கள், இவரைத் தூரத்தில் பார்த்து, “வாருங்களையா பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகளே!” என்று உறக்கக் கூப்பிட, ஸ்டேஷனில் அருகிலிருந்தவர்களெல்லாம் கொல்லென நகைத்தார்களாம்; தனக்கு வெட்கமாயிருந்த போதிலும், ஒருவிதத்தில் சந்தோஷப்பட்டதாயும் எனக்குத் தெரிவித்தார். பிறகு இவரது மரண பர்யந்தம் இவருக்கு இப்பெயரே வழங்கலாயிற்று. யாராவது கோபாலசாமி முதலியார் என்றால், “என்ன, பிஸ்தாக்கொட்டை ஸ்வாமிகளா?” என்பார்கள்.

நான் அதற்குத் தக்க பாத்திரனாக அல்லாவிட்டாலும், என்னிடம் மிகவும் பிரீதி வைத்திருந்த கனம் சதாசிவ ஐயர் அவர்கள், ‘இந்தப் பிஸ்தாக்கொட்டைச் சாமியார் என்கிற பாத்திரத்தை எங்கு பிடித்தீர்?’ என்று ஒருமுறை கேட்ட ஞாபகமிருக்கின்றது. ஆகவே, இப்பாத்திரத்தை அப் பெயருடன் நிர்மாணம் செய்த விவரத்தை இங்கு எழுதுகிறேன்.

1894ஆம் வருஷம் புதுச்சேரியிலிருந்த தனவந்தரான கூனிச்சம்பட்டு லட்சுமணசாமி செட்டியார் என்பவர் தன் குடும்பத்தார் பலருடன் காசி யாத்திரைக்குச் சென்றார்.