பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

383


உபயோகித்திருக்கக் கூடாது” என்று சொன்னார். அப்பொழுது “ஐயோ! அப்படி யொன்றுமில்லை. உங்கள் பெயரை உபயோகிக்க வேண்டுமென்று செய்தவனன்று. ஏதோ தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமேயென்று அப்பெயர் வைத்தேன். இது அகஸ்மாத்தாய் நேரிட்டது” என்று சொல்லி அவர் மன்னிப்பைக் கேட்டேன். இதில் வேடிக்கையென்ன வென்றால், இப்பொன் விலங்குகள் என்னும் நாடகம்தான் மற்ற நாடகங்களைவிட மேலானது என்று இதற்குப் பரிசு கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்த பரீட்சகர்களுக்குள் இவர் ஒருவராய் இருந்தார்! நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருப்பதிலும் நாடக ஆசிரியர்கள் ஜாக்கிரதை யாயிருக்க வேண்டியிருக்கிறது!

இப்பொன் விலங்குகள் நாடகத்தில், டி.சி.வடிவேலு நாயகர், மிஸ் ரோஸ் கமலா என்னும் கிறிஸ்தவப் பெண்ணாகவும், பி.ஏகாம்பர ஐயர், பி.ஏ; பி.எல்; ராமச்சந்திரனுடைய தந்தையாகவும் மிகவும் விமரிசையாக நடித்தார்கள்.

இந்நாடகமானது என் குறிப்பின்படி இதுவரையில் 35 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. நாடகக் கம்பெனிகள் இதைச் சாதாரணமாக ஆடுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் இதில் சங்கீதத்திற்கு இடமில்லாமையேயென்று நினைக்கிறேன். ஒரு முறை வேலு நாயர் இதைத் தன் கம்பெனியைக் கொண்டு சென்னை ராயல் தியேடேரில் ஆடினார். அப்பொழுது என்னை வரவழைக்க, நான் போயிருந்தேன். நாடகத்தை வேலு நாயர் நன்றாய் நடத்திய போதிலும், வந்திருந்த ஜனங்களுக்கு இது சந்துஷ்டியை அளிக்கவில்லை யென்பது என் அபிப்பிராயம். இரண்டுமணி நேரம் நாடகம் நடந்த பிறகு, காலெரி (Gallery) யிலிருந்த ஒருவன் எழுந்திருந்து “என்ன ஐயா? இந்த நாடகத்தில் பாட்டே இல்லையா?” என்று உரக்கக் கேட்டான்! சங்கீதத்தையே விரும்பும் நாடகாபிமானிகளுக்கு இந்நாடகம் பிரயோஜனப்படாது என்பது திண்ணம். மதுரையில் கிங் ஜார்ஜ் அமேடூர் டிராமாடிக் அசோசியேஷன் (King George Amateur Dramatic Association) என்னும் சபையார் சில வருஷங்களுக்கு முன் இதை மிகவும் நன்றாய் நடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அச்சமயம், ராமச்சந்திரனாகவும்