பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

நாடக மேடை நினைவுகள்


சாமர்த்தியமில்லை என்று மறுக்கவே, எனதாருயிர் நண்பராகிய சி.ரங்கவடிவேலுக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. அவர் அநேக வருஷங்களாக இந் நாடகத்தில் சந்திரமதியாக ஆட வேண்டுமென்று விருப்பமுற்றிருந்தார். என்னை இந்நாடகத்தை யெழுதும்படியாகப் பன்முறை கேட்டும், என்னால் முடியாதென்று மறுத்து வந்தேன்; பிறகு இந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவே, தன் பொருட்டாவது நான் இந்த ஹரிச்சந்திரன் வேடம் பூணவேண்டுமென்று வற்புறுத்தினார். எங்கள் சபை நிர்வாக சபையாரும் என்னை ஆடும்படிக் கேட்டனர். நூலாசிரியராகிய பவாநந்தம் பிள்ளை அவர்களும் என்னைக் கேட்டனர். இவர்கள் எல்லாம் என்னை வேண்டிக் கொண்டனர் என்று பெருமையாக இதை இங்கு நான் எடுத்து எழுதவில்லை. வாஸ்தவத்தில் சரியாக அப் பாத்திரத்தையாடச் சக்தி அற்றவனாயினும் அதை ஆட நான் ஒப்புக்கொண்டத்தற்குக் காரணத்தைக் கூறினேனே யொழிய வேறன்று. கடைசியில் நிர்வாக சபையில், இவ்விஷயம் தீர்மானத்திற்கு வந்தபொழுது, “எனக்கு ஹரிச்சந்திரனாயாட இஷ்டமில்லை. அந்தப் பாத்திரத்தைச் சரியாக நடிப்பதற்கு எனக்குத் திறமையில்லை; ஆயினும் எனது நண்பர் ரங்கவடிவேலு சந்திரமதி யாக நடிப்பதற்கு இடங்கொடுக்க வேண்டுமென்றே, நான் அரிச்சந்திரனாக நடிக்க ஏற்றக் கொள்ளுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகே இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டேன். நான் இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டால், அப்பாத்திரத்திற்கு நாம் தகுந்தவர்கள்தானா, அதை நம்மால் நடிக்கத் திறமையுண்டா, நமக்குப் பொறுத்தமாயிருக்குமா என்று யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கவனிக்கும் பொருட்டே.

இந்நாடகம் ஒத்திகை செய்த பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இனி எழுதுகிறேன். எனக்கோ பாடத் தெரியாது; ஆகையால் இந்த அரிச்சந்திரனாக நடிப்பதில் வசனத்தைக் கொண்டே நான் சபையோரைத் திருப்தி செய்ய