பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/402

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

387


வேண்டியவனாயிருக்கிறேன் என்று யோசித்து, இப் பாத்திரத்தை நடிப்பதில் ஆங்காங்கு உருக்கமான பாகங்களிலெல்லாம் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று யோசித்துத் தீர்மானித்து, கஷ்டப்பட்டு ஒத்திகை செய்து வந்தேன். சந்திரமதியையும், தேவதாசனையும் அடிமையாகக் கொண்ட காலகண்ட ஐயர் வசம் அவர்களை ஹரிச்சந்திரன் ஒப்புவிக்கும் சமயத்தில், கண்களில் நீர் தாரைதாரையாக வரும்படி ஒத்திகையில் ஒரு நாள் நடித்தேன். அத்தினம் எனது ஆக்டர்கள் நாடகாசிரியர் உள்படப் பல அங்கத்தினர், ஒத்திகை செய்யும் அறையில் குழுமியிருந்தனர். பார்த்தவர்களெல்லாம் இது நன்றாயிருக்கிறதென மெச்சினர். ஆயினும் இவர்களே, நாடக தினம் இக்காட்சியை காண அபின், என்னிடம் வந்து, அன்று ஒத்திகையில் நீங்கள் ஆக்டு செய்தது போல் அவ்வளவு உருக்கமாயில்லை என்று கூறினர். நான் யோசித்துப் பார்க்குமிடத்து, ஒத்திகையில் நடித்தது போலத்தான் மேடையின் மீதும் நடித்ததாக எனக்குத் தோன்றியது. அப்படியிருக்க இவர்கள் மனத்தில் ஏன் இப்படிப் பட்டது என்று ஆலோசித்துப் பார்குமிடத்து, நாட மேடையைச் சார்ந்த ஓர் உண்மை எனக்கு வெளியானது. அதாவது, ஜனங்கள், ஒரு ஆக்டர் இன்ன சந்தர்ப்பத்தில் இப்படி நடிக்கப் போகிறான் என்று அறியாதிருக்கும் பொழுது, அந்த ஆக்டர் புதுவிதமாய் நடித்தால், அது அவர்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றி, அவர்கள் மனத்தில் நன்றாய் உறுத்தி, அவர்கள் மனத்தைக் கவர்கிறது; அதையே மறுபடியும் பார்க்கும் பொழுது, இவன் இந்த சந்தர்பத்தில் இப்படி நடிக்கப்போகிறான் என்று அறிந்தவர்களாதலால், அது அவர்களுக்குச் சாதாரணமாகப் போய்விடுகிறது; இது காரணம் பற்றியே, இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் ஒத்திகை செய்யும் பொழுது, நாடகாசிரியன், பக்க வாத்தியக்காரர்கள் தவிர மற்றவர்கள் ஒருவரையும் சாதாரணமாகப் பார்க்க விடுவதில்லை.

இதற்குக் காரணம், நான் முன்னே கூறியது என்பதை என் சுயானுபவத்தில் கண்டேன். ஆகவே சாதாரணமாக, ஒத்திகைகள் நடத்தும் பொழுது, உடனிருக்க வேண்டிய ஆக்டர்கள் தவிர மற்றவர்களைப் பார்க்க விடுவது