பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/404

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

389

நாடக மேடை நினைவுகள்


என் அபிப்பிராயம்; முக்கியமாக மேற்சொன்ன இரண்டாவது கட்டத்தில் ஓர் உயர்குலத்து ஸ்திரீ துர் அதிர்ஷ்டத்தினால் துடைப்பத்தைக் கொண்டு ஒரு வீட்டின் முற்றத்தைப் பெருக்கும்படியான இழிதொழில் புரியும்படி நேரிட்ட பொழுது இப்படித்தான் நடிக்கவேண்டுமென்பதை இவரிடம் நான் கண்டேன். இக்காட்சியில் ரங்கவடிவேலு நடித்தது எல்லோருடைய மனத்தையும் உருகச் செய்தது என்பதற்கு ஐயமன்று. இந்நாடகத்தில் நாங்கள் இருவரும் ஐந்தாறு முறை நடித்திருக்கிறோம். இலங்கைக்குச் சென்று கொழும்பில் ஒரு முறை இதை நாங்களிருவரும் நடித்தபொழுது ரூபாய் 1400க்கு மேல் வசூலாயிற்று. தற்காலம் இந்நாடகத்தை எங்கள் சபையார் நடிக்கும் பொழுது டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாராவது எஸ். ராகவாச்சாரியாராவது ஹரிச்சந்திரனாக நடிக்கின்றனர். சந்திரமதி வேடம் டி.சி.வடிவேலு நாயகர் பூணுகின்றனர். தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசனுக்குப் பிறகு, பாட்டில் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியாரை எடுத்துக் கூறுவேன். ஆயினும் இப்பொழுது எங்கள் சபையார் நடிக்கும் ஹரிச்சந்திர நாடகம், திவான் பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியதன்று. சில பாகம் வி.வி.தேவநாத ஐயங்கார் எழுதியது; சில பாகம் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியது; சில பாகம் நான் அச்சிட்டிருக்கும் பிரதியிலிருந்து எடுத்தது; இவைகளையெல்லாம் சேர்த்து ஆடப்பட்டு வருகிறது. இவ்வாறு கலப்படமாய் ஆடுவது உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.

மேலே நானும் ஹரிச்சந்திர நாடகம் ஒன்று தமிழில் அச்சிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது எழுதப் பட்டது அடியில் வருமாறு: இதற்குச் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் ஒரு நாடக கிளப்பாகச் சேர்ந்து, சில ஆங்கில நாடகங்களை வருஷந்தோறும் நடத்தி வந்தனர். அதன் பெயர் ‘மதராஸ் ஸ்டூடன்ட்ஸ் டிராமாடிக் கிளப்’ (Madras Students Dramatic Club) என்று எனக்கு ஞாபகம். அவர்கள் ஆங்கிலத்தில் நாடகம் ஒன்று நடத்திய பொழுது என்னை அழைத்திருந்தார்கள். அதற்குப் போயிருந்தபொழுது, நான் இந்த ஆங்கிலக் கதைகள் நடத்துவதை விட்டு, நமது தேசத்துக்