பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/405

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

நாடக மேடை நினைவுகள்


கதைகளை நடத்தக் கூடாதா என்று கேட்டேன். தென்னாலி ராமன் தகப்பனார் சிரார்த்தத்தைப் பற்றிய கதையொன்று முன்னமே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்; அதன்படி, நானிவர்களை இப்படிக் கேட்கவே, “நீங்கள் அப்படிப்பட்ட நாடகத்தை எங்களுக்கு இங்கிலீஷில் எழுதித் தாருங்கள”” என்று அச் சபையார் கேட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி ஹரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். அதை அச்சிட்டும் வெளிப்படுத்தினேன். அதை அப்பால்ய சபையார் ஆடிய பொழுது, வந்திருந்தவர்கள் நன்றாயிருந்ததென மெச்சினர். அது பன்முறை சென்னையிலும் நெல்லூர் முதலிய வெளி ஜில்லாக்களிலும் ஆடப்பட்டது. அச்சிட்ட அப் புத்தகத்தின் இரண்டு பதிப்புகளும் செலவழிந்து போய், இன்னும் அப்புஸ்தகம் வேண்டுமென்று அடிக்கடிக் காகிதங்கள் வருகின்றன. இப்படி இது கொஞ்சம் பிரபலமாகவே, மற்றொரு சபையார் திவான் பகதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் அச்சிட்டிருக்கும் புஸ்தகம் மிகப் பெரியதாயிருக்கிறது; ஓரிரவிற்குள் ஆடத் தகுந்தபடி, ஆங்கிலத்தில் நீங்கள் அச்சிட்டிருக்கும் ஹரிச்சந்திர நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள் என்று கேட்டனர். அதன் பேரில், அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுத்தேன். இது நான்கைந்து முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. சென்ற வருஷம் ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப் (Trades Staff Club) அங்கத்தினர் இதை மிகவும் விமரிசையாக நடித்தனர். நான் பார்த்த சந்திரமதிகளுக்குள் இச்சபையைச் சார்ந்த சந்திரமதி வேஷதாரியே, எங்கள் சபை கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, நன்றாய் நடித்தவர் என்பது என் அபிப்பிராயம்.

இந்த ஹரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை எங்கள் சபையார் நடத்திய பொழுது, ஷ துரைசாமி ஐயங்காரும், வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனாகவும் சந்திரமதியாகவும் நடிக்க, எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் காலகண்டியாகவும் காலகண்ட ஐயராகவும் நடித்தோம்.

இந்த ஹரிச்சந்திர நாடகத்தை விட்டகலுமுன் இன்னொரு விஷயத்தைக் குறித்து எழுத விரும்புகிறேன். ஒரு முறை வெளியூரில் இதை எங்கள் சபையார் நடித்த பொழுது,