பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

நாடக மேடை நினைவுகள்


களை எடுத்துக்கொள்வதிலும்; ஒருவிதத்தில் அதைவிட அதிக சந்தோஷமிருந்ததென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில் பெரிய பாகங்கள் ஆடும்பொழுது எப்படியிருக் குமோ என்னும் பயமிருந்தது; இச் சிறிய பாகங்கள் ஆடும்பொழுது கவலையேயில்லை.

20ஆவது அத்தியாயம்

னி 1911ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன். இவ்வருஷம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளுள், எங்கள் சபை கொழும்பு நகரம் சென்று நாடகங்களாடியது ஒன்றாகும்; இது ஒரு பெருங் கதையாகையால் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை எனதாருயிர் நண்பராகிய ரங்கவடிவேலுவும் நானும், திவான் பஹதூர் மாசிலாமணிப் பிள்ளையுடனும், இன்னும் சில சிநேகிதர்களுடனும் இலங்கைத் தீவிற்குப் போயிருந்தோம். அது வேறு கதையாம். எனது நாடக மேடை நினைவுகளைப்பற்றிய - அதில் நேரிட்ட சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். அப் பிரயாணத்தில் கொழும்பு நகரத்தை நாங்கள் சுற்றிப்பார்த்து வந்தபொழுது, எங்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு போய் ஊரிலுள்ள முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் காட்டிக்கொண்டு வந்த ஒரு நண்பர், ஓரிடத்தில், ‘இங்கே பப்ளிக் ஹால் (Public Hall) இருக்கிறது. இதைப் பார்க்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அவர் கொழும்பு நகரத்தாரின் வழக்கப்படி, ஹால் என்கிற பதத்தை, சற்று தவறாக உச்சரிக்க நாங்கள் எல்லாம் நகைத்து, அதை அவசியம் பார்க்க வேண்டுமென்று கூறினோம். உள்ளே நுழைந்தவுடன் அது ஒரு நாடக சாலையாக அமைக்கப் பட்டது என்பதைக் கண்டோம். பிறகு ரங்கவடிவேலுவும் நானும் உள்ளே சென்று எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்து, எங்கள் நண்பர்களை