பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

393


யும் அழைத்துக் கொண்டு அக் கட்டிடம் முழுவதும் பார்த்தோம். அந் நாடக சாலை சிறிதாயிருந்தபோதிலும் (சுமார் 500 பேருக்கு மேற்கொள்ளாது) அது மிகவும் அழகாய்க் கட்டப்பட்டிருந்தது. உள்ளே எல்லாம் பலவித வர்ணங்களுடைய மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன; நாடக மேடையானது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேசினால் ஹால் முழுவதும் எளிதில் கேட்கும்படியான தன்மை வாய்ந்ததாயிருந்தது. நம்முடைய பட்டணத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் எவ்வளவு கத்தினாலும் பாதி ஹாலுக்குமேல் கேட்கவில்லையே, இங்கு எவ்வளவு சௌகர்யமாயிருக்கிறதென எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அன்றியும் நாடகமாடும் மேடை (Stage)சென்னையிலுள்ளதைவிட, இரு மடங்கு விசாலமானதாயிருந்தது. அன்றியும் அதற்குப் பின்னால் நேபத்யம் (வேஷம் தரிக்கும் இடம்) நாடக மேடையைவிட விசாலாமானதாய், நிலைக்கண்ணாடிகள் முதலியன வைக்கப்பட்டு மிகவும் அழகாயிருந்தது. இதை யெல்லாம் பார்த்து, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, ‘இங்கே நாம் நாடகங்கள் ஆடினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூற, அதற்கு, ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!’ என்று வேடிக்கையாகப் பதில் உரைத்து, அவ்விடத்தை விட்டகலுமுன், அங்கிருந்த ஹால்மேல் விசாரணைத் தலைவரை, வேடிக்கையாக, ‘இங்கே யாராவது தமிழ் நாடகங்கள் அல்லது இந்திய நாடகங்கள் போடுகிறார்களா?’ என்று கேட்க, ‘அவ்வதிகாரி, ‘அதிகமாயில்லை. எப்பொழுதாவது ஒரு சமயம் போடுவதுண்டு!’ என்று பதில் உரைத்தார். அதன் மீது, ‘அவர்களுக்கு என்ன வரும்படி சாதாரணமாக வரும்?’ என்று வினவ, அவர் ‘சாதாரணமாக அறுபது எழுபதுவரைக்கும் வரும்’ என்றார். அறுபது எழுபது ரூபாய் ஒரு நாடகத்திற்கு வரும்படி வந்தால், நாம் இங்கு நாடகம் ஆடினாற் போல்தான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, ‘வெள்ளைக்காரக் கம்பெனிகள் ஆடினால் அவர்களுக்கு என்ன வரும்படி வரும்?’ என்று கேட்க அதற்கவர், ‘அவர்களுக்கு நூற்றிருபது, நூற்றைம்பது வரும்!’ என்றார்; வெள்ளைக்காரர்களுக்கு நூற்றைம்பது ரூபாய் வந்தால் எப்படிச் செலவு கட்டி வரும், இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென நினைத்துக்கொண்டு வெளியில் வந்தபின், எங்களை அழைத்துக்கொண்டு போனவரைப்