பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

395


அதை எப்படியாவது நீதான் நிறைவேற்ற வேண்டும்!” என்று கூறி, அவ்வாறே, நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானித்து விட்டார்கள்! சரி, யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், இதென்ன வேடிக்கையாகக் கூறப்போய், விபரீதமாக முடிந்ததே என்று யோசித்தவனாய் என்னாலியன்ற அளவு பிரயத்தனப்படுகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டபடியால், நாம் பிரயத்தனப்பட்டுப் பார்ப்போம் என்று தீர்மானித்து, கொழும்பில் முன்முறை நாங்கள் போயிருந்த போது தங்கியிருந்த வீட்டுக்காரராகிய மிஸ்டர் துரைசாமி என்பவருக்கு இதைப்பற்றி ஒரு நிருபம் எழுதினேன். எழுதியபோது என் தாத்பர்யம் என்னவென்றால், உங்கள் சபை இங்கு வருவது சௌகர்யமாயிராது, சபைக்கு நஷ்ட முண்டாகும் என்று பதில் எழுதிவிடுவார். அதைக் கமிட்டி யாருக்குக் காண்பித்து, என்னாலியன்ற அளவு முயன்று பார்த்தேன், என்மீது பழியில்லை என்று கூறிவிடலாம் என்பதே. எனது கொழும்பு நண்பர் என்ன செய்தார் என்றால், நான் நினைத்ததற்கு மாறாக, “உங்கள் சபை சந்தோஷமாக இங்கு வரலாம்; உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் வராது!” என்று உடனே பதில் அனுப்பினார்! அதற்குமேல் நான் என்ன செய்வது? ‘இதென்னடா கஷ்டமாக முடிந்ததே!’ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, ‘கொழும்பிலிருந்து பதில் வந்ததா?’ என்று விசாரித்துக் கொண்டிருந்த ரங்கவடிவேலு, அதைப் படித்துப் பார்த்துவிட்டு “எப்படியாவது நம்முடைய சபை அங்கே போக வேண்டும்” என்று வற்புறுத்தினார். அவர் இப்பிரயாணத்தின் மீது மிகவும் மனம் வைத்திருக்கிறார் என்று அறிந்து அதன் பலவிதமான கஷ்டங்களை எண்ணிய வனாய், அவைகளை யெல்லாம் அவருக்கு நான் எடுத் துரைக்க, அவர் அவற்றை யெல்லாம் கேளாதவராய், “இதையெல்லாம் என்னிடம் சொல்லுவானேன்? உங்களுக்கு மனம் இல்லை என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் மனம் வைத்தால் இது எப்படியும் முடியும் என்று எனக்குத் தெரியும்!” என்று பதில் உரைத்தார். இதன் பேரில் நான் வாயெடுக்க வகையில்லாதவனானேன். என்னை ஏதாவது ஒரு காரியம் செய்யும்படி உந்த வேண்டுமென்றால்,