பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/411

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

நாடக மேடை நினைவுகள்


எனதுயிர் நண்பர், இந்த மார்க்கத்தை நன்றாகக் கற்றிருந்தார். அன்றியும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஹனுமாருடைய குணத்தில் ஒரு சிறு குணம் எனக்குண்டெனத் தெரிவித்திருக்கின்றேன்! ‘சரி, இனிப் பேச்சில்லை ! அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிச் சபை எப்படியாவது கொழும்பிற்குப் போய்த்தான் தீர வேண்டுமென்று தீர்மானித்து, ‘நீ ஒன்றும் பயப்படவேண்டாம்!’ என்று எனதுயிர் நண்பரிடம் கூறி எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி, ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.

மேற்சொன்னபடி ஆரம்பித்த நாள் முதல் கொழும்புக்குப் போய் நாங்கள் முதல் நாடகம் கொடுத்த ராத்திரி வரையில் ஒரு நாளாவது என் வழக்கப்படி நித்திரை செய்யவில்லை என்று கூறுவேனாயின் அது பொய்யாகாது. நான் அந்த ஒரு மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் அவ்வளவு கஷ்டப்பட்டோமேயென்று நான் துக்கப்படவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்ட காரியத்தை ஸ்வாமியின் கிருபையால் பூர்த்தி செய்தோமேயென்று சந்தோஷப் படுகிறேன். எனக்கு நேரிட்ட கஷ்டங்களில் சிலவற்றை இங்கெடுத்து எழுதுகிறேன்.

முதலில், பிள்ளையார் குட்டாக, எனது தெலுங்கு நண்பர்களில் ஒருவர், தமிழில் மாத்திரம் நாடகம் நடத்தப் போகிறார்கள் தெலுங்கிலில்லை என்கிற காரணத்தினாலோ, அல்லது வேறு எக்காரணத்தினாலோ சில தெலுங்கு ஆக்டர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ‘சபை கொழும்பிற்குப் போகக்கூடாது!’ என்று ஆட்சேபித்து, அதற்காகச் சபைப் பொதுக்கூட்டத்தில் இதைத் தீர்மானிக்க வேண்டுமென்று ஒரு மஹஜர் (Mahajzar) தயார் செய்ய ஆரம்பித்தார். அவர்களுடனெல்லாம், மெல்லப் பேசி அவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, கடைசியாக இதற்கெல்லாம் தலைவனாக இருந்த அவரையே நேரிற் கண்டு அவரது ஆட்சேபணைகளுக்கெல்லாம் சமாதானம் சொன்னேன். கடைசியாக அவர் வேறு நியாயம் எடுத்துக் கூற வகையறியாமல், “நீ சத்தியமூர்த்தியையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் இப்பொழுதுதான் ஆக்டு செய்யக் கற்றுக்கொள்ளுகிறான். அவனை அழைத்துக்கொண்டு போவதில்லை என்று